உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி... அண்ணாமலை சொல்லும் காரணம் இதுதான்..!

By Asianet TamilFirst Published Oct 5, 2021, 9:17 PM IST
Highlights

மத்திய அரசு நிறைவேற்றிய பல திட்டங்கள் உள்ளாட்சிகளுக்கு போய் சேர்ந்திருக்கிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மத்திய அரசுடன் சேர்ந்து பல நடவடிக்கைகளை எடுக்கிறது. நாடு முழுவதும் 89 கோடிப் பேருக்கும், தமிழகத்தில் 4.6 கோடிப் பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக தமிழக அரசு கொண்டு வரும் நடவடிக்கைகளை தமிழக பாஜக ஆதரிக்கும். தியாகி குமரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து அரசிடம் ஒப்படைக்க தாமதமாகி வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு மத்திய அரசின் சார்பில் மணி மண்டபம் கட்டப்படும்.
அதே போல், காமராஜருக்கு மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கித் தந்தால், அவரது நினைவைப் போற்றும் வகையில் மத்திய அரசு சார்பில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த குறிப்புகள் எதுவும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் திமுக நீட் தேர்வை எதிர்க்கிறது. நீட் தேர்வு நடக்காது என்று நாடகம் போடுவதை திமுக நிறுத்த வேண்டும். 2006 - 2011-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் எத்தனை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கொங்கு மண்டலத்தைத் தமிழக அரசு திட்டமிட்டுப் புறக்கணிப்பது போலத் தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற்றால் ஜனநாயகம் நிச்சயம் வெல்லும். மத்திய அரசு நிறைவேற்றிய பல திட்டங்கள் உள்ளாட்சிகளுக்கு போய் சேர்ந்திருக்கிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்.”என்று அண்ணாமலை தெரிவித்தார்.

click me!