10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்... புதிய திட்டத்தை கையிலெடுக்கும் கல்வித்துறை..!

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2020, 12:37 PM IST
Highlights

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், கிரேடு அடிப்படையில் தேர்ச்சி வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், கிரேடு அடிப்படையில் தேர்ச்சி வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வு முடிவுகள், வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கான மதிப்பெண்களைக் கணக்கிடும் விதமாக மாணவர்களின் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் விடைத்தாள்கள், ரேங்க் கார்டுகள், அசல் மதிப்பெண் பதிவேடுகள், வருகைப் பதிவேடு விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. 

மதிப்பெண்களைக் கணக்கிடுவதில் காலாண்டுத் தேர்வை நடத்தாதது, விடைத்தாள்கள் இல்லாதது, காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என்று பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ள காரணத்தால் மாற்று வழிகள் குறித்து ஆராய பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து கல்வித்துறை இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

 

A, B, C என்று கிரேடு முறையில் தேர்ச்சி வழங்கும் போது 11-ம் வகுப்பில் பாடப் பிரிவைத் தேர்வு செய்வதில் ஏதேனும் சிக்கல் வருமா? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள் அமைச்சர், முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட்ட உடன், செயல்பாட்டுக்கு வரும் என்றும் கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்த்து மாநிலம் முழுவதும் உள்ள பிற மாவட்டங்களில், மாணவர்களின் விடைத்தாள்கள், ரேங்க் கார்டுகள், அசல் மதிப்பெண் பதிவேடுகள் உள்ளிட்டவை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவிக்கும் வழிகாட்டுதலின் படி, மதிப்பெண்களைக் கணக்கிடும் பணி விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!