மாட்டிறைச்சி விற்கக்கூடாது என மிரட்டிய வட்டாட்சியர் பணியிட மாற்றம்... தமிழக அரசுக்கு நன்றி..!

By Thiraviaraj RMFirst Published Jun 29, 2021, 3:43 PM IST
Highlights

வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அவிநாசி அருகே மாட்டிறைச்சி விற்கக்கூடாது என கடை உரிமையாளரை மிரட்டிய வட்டாட்சியர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள கானாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். அண்மையில் இவரது இறைச்சிக் கடைக்கு இரவு நேரத்தில் வந்த அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மாட்டிறைச்சி விற்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.

ஆடு, மற்றும் கோழி இறைச்சி மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மாட்டிறைச்சி விற்பனை செய்தால் கடையை மூடிவிடுவேன் என கூறி வேலுச்சாமியை மிரட்டியுள்ளார். அப்போது அவர், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை என கூறியதால் வேலுச்சாமிக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே மாட்டிறைச்சி விற்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் தமிழ்செல்வன் பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் மாட்டிறைச்சி விற்க்கக் கூடாது என கூறிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மாட்டிறைச்சி மட்டும் விற்பனை செய்யக்கூடாது என கூறிய வட்டாட்சியரைக் கண்டித்தும், இவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் அவிநாசியில் இருந்து ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் மாட்டிறைச்சி விற்கக் கூடாது எனக் கூறிய அவிநாசி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

click me!