கொரோனா 3வது அலை முன்னேற்பாடுகள் தீவிரம்... ரூ.100 கோடியை ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 29, 2021, 3:17 PM IST
Highlights

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை  பிறப்பித்துள்ளார். 
 

தமிழக முயற்சிகளுக்கு மக்கள் கை அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, இன்று வரை 353 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறே தகவல்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதுவரை பெறப்பட்டுள்ள நிதியிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில்  மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் எப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இப்பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாய் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 

இதனையடுத்து, சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினையும், கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்காக தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் மருந்துகளை வாங்குவதற்கு 25 கோடி ரூபாயினையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

தற்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், இந்தத் தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கருப்பு பூஞ்சை, டெல்டா பிளஸ் வைரஸ் வரிசையில் தற்போது கொரோனா 3வது அலைக்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தற்போது தொடங்கியுள்ளது. 

click me!