
தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக் கூடிய உபரித் தொகையைக் கணக்கில் கொண்டு 20 சதவீதம் வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நஷ்டமடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மொத்தமாக 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை அளிக்கப்படும்.
தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகைகள் அளிக்கப்படும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கும் 20 சதவீதம் போனஸ், கருணைத் தொகை கொடுக்கப்படும்.
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு 20 சதவீதமும், பிற கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 10 சதவீதமும் போனஸ், கருணைத் தொகை அளிக்கப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் வாரிய சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 10 சதவீத போனசும், குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் போனசும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அரசு ரப்பர் கழகம், வனத்தோட்டக் கழகம், தேயிலைத் தோட்டக் கழகம், சர்க்கரை ஆலைகள், பால் உற்பத்தியாளர் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு லாபம், நட்டத்துக்கு ஏற்ப 10 அல்லது 20 சதவீதம் போனஸ், கருணைத் தொகை கொடுக்கப்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
போனஸ் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400-ம், அதிகபட்சம் ரூ.16,800-ம் பெறுவர். தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உள்பட இதர நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 69 ஆயிரத்து 610 தொழிலாளர்களுக்கு ரூ.489.26 கோடி போனஸாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.