
தமிழக அரசியல் நிலவரம் குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி ஒபிஎஸ்க்கு கிரீன் கொடி காட்டியதும் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் எடப்பாடிக்கு எதிராக சிவப்பு கொடி காட்டிவிட்டு ஆளுநரிடம் புகார் அளித்தனர்.
எடப்பாடியும் பலதரப்பு வாரியாக சமாதான கொடியை காட்டி அழைப்பு விடுத்து பார்த்தார். ஆனால் அவர்கள் வந்த பாடில்லை. மேலும் மேலும் எடப்பாடிக்கு தொந்தரவு தருவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி சபாநாயகரை சீண்டிவிட்டு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டார். நீதிமன்றம் தலையிட்டும் அவர்களுக்கு உரிமை இல்லை என தட்டிக்கழித்தனர் எடப்பாடி தரப்பினர்.
இதனிடையே டிடிவி எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாமல் எதிர்கட்சி தரப்பும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுமாறு ஆளுநரை வலியுறுத்தினர். ஆனால் ஆளுநர் மவுனம் கலையாமல் டெல்லிக்கும் தமிழகத்திற்கும் பறந்து கொண்டே இருந்தார்.
இந்நிலையில், சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி மற்றும் டிடிவி தரப்பு ஆளுநர் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து இன்று டெல்லி சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் கதிகலங்கி போயுள்ளார் என விமர்சனங்கள் எழுகிறது. மேலும், தற்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.
அவரை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஜனாதிப்தி ராம்நாத் கோவிந்தை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.