
முதலமைச்சர் பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தற்போது குடகில் உள்ள ரெசார்ட்டில் தங்கியுள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை மிரட்டும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை பழனிச்சாமி எடுத்து வருகிறார். நாமக்கல் ஒப்பந்ததாரர் மர்ம மரண வழக்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான பழனியப்பனுக்கு வலை வீசப்பட்டது.
தற்போது அந்த வலை செந்தில் பாலாஜிக்கு வீசப்பட்டுள்ளது. குடகு ரெசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவாளர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இந்நிலையில், தன்னை எதிர்த்து செயல்பட்டதால் அவர் மீதான பழைய பண மோசடி வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளார் பழனிச்சாமி.
போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக 38 பேரிடம் சுமார் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக உள்ள வழக்கில் விசாரிப்பதற்காக தமிழக போலீசார் ஏவப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியைத் தேடி தமிழக போலீசார், எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரெசார்ட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு செந்தில் பாலாஜி இல்லை என கூறப்படுகிறது. ரெசார்ட்டை விட்டு தப்பிய செந்தில் பாலாஜியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் எந்தந்த வகையில் அட்டாக் செய்ய வேண்டும் என தீவிரமாக திட்டம் தீட்டி வரும் பழனிச்சாமி, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை அதற்காக பயன்படுத்தி வருகிறார்.