ஏதோ நேர்மையின் சிகரத்தைப் போலக் காட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊழல் அதிமுகவைக் காப்பாற்றி வருவதை சட்ட அமைச்சர் ரகுபதி அம்பலப்படுத்தி இருக்கிறார்.
அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் ஆளுநர் ரவி தடுத்து வருகிறார். இவர்கள்தான் ஊழல் ஒழிப்பைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள் என முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில்;- ஏதோ நேர்மையின் சிகரத்தைப் போலக் காட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊழல் அதிமுகவைக் காப்பாற்றி வருவதை சட்ட அமைச்சர் ரகுபதி அம்பலப்படுத்தி இருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியுள்ள கடிதத்தில், ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிட இசைவு ஆணைக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதையும் குறிப்பிட்டு, விரைவான நடவடிக்கை எடுத்திடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சிபிஐ கோரியதையும் அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டுள்ளார். மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சிபிஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ( 12.9.2022) அனுப்பியதாகவும், ஆனால் இதுவரையில் இந்தக் கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்கள், 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கைக் கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் வழங்கவில்லை.
ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநிலச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்றும், இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன என்றும் அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலமாக ஊழல் அதிமுகவினரைக் காப்பாற்றுவதற்கு ஆளுநர் ரவி துடித்ததை அறிய முடிகிறது. யாரைக் காப்பாற்றுகிறார் ஆளுநர்? 'குட்கா' வியாபாரிகளிடம் பணம் பெற்ற கூட்டத்தைக் காப்பாற்றுகிறார். குட்கா வியாபாரிகளிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்துகிறது. அப்போது தங்களது வியாபாரத்துக்குத் துணை நின்றவர்கள் அதிமுக ஆட்சியில் யார் யார் என்பதை விலாவாரியாக அந்த வியாபாரிகள் சொல்கிறார்கள். அதற்கான ஆதாரங்களையும் கொடுக்கிறார்கள். 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடத்திய நிறுவனம் அது. அந்த நிறுவனத்தில் இருந்து 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது அதிமுக ஆட்சியில்.
இதில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும், குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் பரவலாகப் பேசப்பட்ட நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சிபிஐ விசாரணை தேவை என்று அதில் முறையீடு வைத்திருந்தார். அன்றைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னிலையில் இந்த வழக்கு நடைபெற்றது.
சிபிஐ விசாரணை தேவையில்லை என்று பழனிசாமி அரசு அப்போது பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதிலில், 'டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான குட்கா பொருள்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை விற்பதற்காக ரூ.55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டு இருந்தது. வருமான வரித்துறையும் இதனை வலிமைப்படுத்துவது மாதிரியான ஆதாரங்களைக் கொடுத்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ( 2018 ஏப்ரல் 26). இதன் தொடர்ச்சியாக அதிமுக காலத்து அமைச்சர்களான புதுக்கோட்டை விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு சிபிஐ அனுமதி கோருகிறது. மாநில அமைச்சரவையும் அனுமதி வழங்கி விட்டது. ஆனால், ஆளுநர் 12.9.2022 முதல் அனுமதி தராமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார்.
இதில் தொடர்புடைய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தராமல் ஒன்றிய பாஜக அரசு இழுத்தடித்து வருகிறது. அதிமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் ஆளுநர் ரவி தடுத்து வருகிறார். இவர்கள்தான் ஊழல் ஒழிப்பைப் பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள். கடிதம் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர். இப்போது குட்கா மாமூல் பேர்வழிகளைக் காப்பாற்றுகிறார். இதையெல்லாம் மறைப்பதற்காகத்தான் சனாதன வேஷம் கட்டி ஆடுகிறார் ஆளுநர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.