தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் ஆளுநரே பொறுப்பு என காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்வது தொடர்கதையாக இருந்து வந்தது. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இச்சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையடுத்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. பல்வேறு தரப்பில் கருத்துகளை கேட்டு அந்தகுழு கடந்தாண்டு ஜூன் 27ம் தேதி, சமர்பித்த அறிக்கையின்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு, கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கிய நிலையில், அவசர சட்டம் கடந்த அக்டோபர் 3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா, கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால், இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தமிழக அரசிடம் சில விளக்கங்களை கேட்டிருந்தார்.
அதற்கு, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று விளக்கமளித்தார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாண்புமிகு ஆளுநரே உங்கள் கைகளில் படிந்திருப்பது மரணத்தின் கறை என்று ஜோதிமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் 43 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஆளுநருக்கோ ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களின் நலன் தான் முக்கியம். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் ஆளுநரே பொறுப்பு.
மாண்புமிகு ஆளுநரே உங்கள் கைகளில் படிந்திருப்பது மரணத்தின் கறை . அதை ஒருபோதும் உங்களால் கழுவவே முடியாது என கூறியுள்ளார்.