'என்னை கிண்டல் பண்ணாங்க.. அவங்களுக்கு இப்போ நான் ஆளுநரா பதில் சொல்றேன்'..! மீம் கிரியேட்டர்ஸ்க்கு பதிலடி கொடுத்த மேதகு தமிழிசை..!

By Manikandan S R SFirst Published Oct 20, 2019, 12:45 PM IST
Highlights

என்னைக் கிண்டல் செய்தவர்களுக்கு ஆளுநராக தற்போது மேடையில் நின்று பதிலடி கொடுக்கிறேன் என்று தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக கடந்த 5 வருடங்களாக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசு தலைவரால் நியமிக்கபட்டார். இதையடுத்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து தமிழகம் வந்திருந்த ஆளுநர் தமிழிசை கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் இருக்கும் பி.பி.ஜி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவில்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு கல்வி, கலை விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும் தமிழ் மண்ணுக்கு நன்றியுடையவனாக எப்போதும் இருப்பேன் என்றார். தமிழ்நாட்டிற்கும் தெலுங்கானா விற்கும் இடையே பாலமாக செயல்படுவதாகக் கூறிய தமிழிசை, மேதகு ஆளுநர் என்று அழைக்கப்படுவதை காட்டிலும் சகோதரி என்று அழைக்கப்படுவதையே தாம் விரும்புவதாக குறிப்பிட்டார். ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் களத்தில் பல்வேறு சவால்களை தாம் சந்தித்ததாகவும் தன்னை கேலி கிண்டல் செய்தவர்களுக்கு தற்போது மேடையில் ஆளுநராக நின்றபடி நான் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

மாணவர்கள் நன்கு படித்து டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்றும் அதே சமயம் அரசியல் கட்சியில் சேர்ந்தால் டாக்டர் பட்டம் கிடைத்துவிடும் என்று கருதக்கூடாது என்றார். இளைய தலைமுறையினர் அரசியலை முழுமையாக தெரிந்து கொண்டு நேர்மையான முறையில் ஈடுபடவேண்டும் என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களித்து 100 சதவீத வாக்குகள் பதிவாக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

click me!