இரண்டு வார்த்தைகள் பேசிய விஜயகாந்த்...! உணர்ச்சிப்பெருக்கில் கண்கலங்கிய தொண்டர்கள்..!

By Manikandan S R SFirst Published Oct 20, 2019, 12:02 PM IST
Highlights


இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான நேற்று அமைச்சர்கள், முக்கிய அரசிய தலைவர்கள் அனைவரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். வீதி வீதியாக சென்று தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர்.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா ஏற்கனவே பிரச்சாரம் செய்திருந்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை கேட்டுக்கொண்டதற்கிணங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று விக்ரவாண்டியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வந்தது. இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்து குவிய தொடங்கினர். அதன்படி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய விக்ரவாண்டிக்கு விஜயகாந்த் வந்தார். பிரச்சார வேனில் முன்பக்கம் விஜயகாந்த் அமர்ந்திருந்தார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வேட்பாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தனர். தேமுதிக தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் என பெருமளவில் திரண்டிருந்தனர்.

அவர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த் தாழ்ந்த குரலில் ”அதிமுகவுக்கு வாக்களியுங்கள், அமைதியாக இருங்கள்” என்று கூறி தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். அங்கு காத்திருந்த தொண்டர்கள், பிரச்சார வேனை நெருங்கி விஜயகாந்த் அமர்ந்த இடத்துக்கு வந்து வேன் கண்ணாடியை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து கஞ்சனூர், சூரப் பட்டு ஆகிய இடங்களில் வேனில் நின்றபடி இதேபோல் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்தால் அதிகம் பேச முடிவதில்லை. இதன் காரணமாக தான் கடந்த மக்களவை தேர்தலின் போதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒருநாள் மட்டும் வந்திருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் தலைவரை பார்த்த மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அவர் பேச தொடங்கியதும் சிலர் உணர்ச்சிப்பெருக்கில் கண்கலங்கியதையும் காண முடிந்தது.

click me!