தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து கூட்டத்தில் இருந்து வெளியேறி ஆளுநர் ரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 4 நாட்கள் பயணமாக ஆளுநர் ரவி டெல்லி செல்லவுள்ளார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட வல்லுநர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் ரவி - தமிழக அரசு மோதல்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆளுநர் ரவி தமிழக அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார். இதே போல திமுக அரசும் ஆளுநருக்கு எதிராக கருத்துகளை கூறியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த பரப்பான சூழ்நிலையில் ஆளுநர் ரவி கடந்த வாரம் தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டிற்கான ஆளுநர் உரையாற்ற வந்திருந்தார். அப்போது தேசிய கீதம் வாசிக்கவில்லையெனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து தனது உரையை வாசிக்க மறுத்தார். இறுதியாக கூட்டத்தில் இருந்தும் வெளியேறினார்.
பதிலுரையை புறக்கணித்த ஆளுநர்
இதன் காரணமாக ஆளுநர் ரவிக்கும் அரசுக்கும் இடையே மோதல் உச்சத்தை அடைந்தது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலுரை அளித்தவர், ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்க வேண்டும் என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கையை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்து தருவதை அப்படியே வாசிக்க வேண்டியது தான் ஆளுநரின் பொறுப்பும், கடமை. ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இந்த மாமன்றத்தை பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருது தோன்றுகிறது. ஆளுநரின் செயல் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட தமிழக சட்டமன்றத்தையே அவமதிக்கும் செயல் அல்லவா கோடிக்கணக்கான தமிழக மக்களை அலட்சியப்படுத்தும் காரியம் அல்லவா.? என விமர்சனம் செய்திருந்தார்.
டெல்லிக்கு புறப்பட்ட ஆளுநர் ரவி
இந்த சூழ்நிலையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனிடையே ஆளுநர் ரவி இன்று காலை 6 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி, தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தெரிகிறது. மேலும் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநர் ரவி இந்த மாதம் 4 ஆம் தேதி தான் டெல்லி சென்றிருந்தார். தற்போது இந்த மாதத்திலையே இரண்டாவது முறையாக டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்