ஆளுநர் ரவி-முதல்வர் ஸ்டாலின் மோதல் சாதாரண ரகம்... சென்னா ரெட்டி-ஜெயலலிதாவின் அதிர வைத்த மோதல்.. ஒரு பிளாஷ்பேக்

By Asianet TamilFirst Published Apr 22, 2022, 8:14 AM IST
Highlights

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் மோதல் என்று கூறப்படும் நிலையில், 28 ஆண்டுகளுக்கு முன்பு சென்னா ரெட்டிக்கும் - ஜெயலலிதாவுக்கு நடந்த மோதலின் ஃபிளாஸ்பேக் இது.

ஆளுநர்கள் - முதல்வர்கள் மோதல்
 
மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கர் - முதல்வர் மம்தாவும் சண்டைக் கோழிகளைப் போல இருக்கிறார்கள். தமிழகத்திலும் ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வர் மு.க. ஸ்டாலின் இடையேயான மோதல் முற்றியிருக்கிறது.  இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி ஆளுநர் - முதல்வர் மோதலில் பிரசித்திப் பெற்றது என்றால், 1993 முதல் 1996 வரை பதவியில் இருந்த ஆளுநர் சென்னா ரெட்டி - முதல்வர் ஜெயலலிதா இடையேயான மோதல்தான். 1993-இல் தமிழக ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங், மாற்றலாகி வேறு மாநிலத்துக்கு சென்றார். புதிய ஆளுநராக ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சென்னா ரெட்டி தமிழகத்தில் நியமிக்கப்பட்டார். தொடக்கம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பிறகு எப்படி சென்னா ரெட்டியும் - ஜெயலலிதாவும் சண்டைக் கோழிகளாக மாறினார்கள்?

1993-இல் சென்னா ரெட்டி பதவியேற்ற கொஞ்ச நாளிலேயே சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வெடிக்குண்டு வெடித்தது. இதில் 11 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் நடந்தபோது ஜெயலலிதா சென்னையில் இல்லை. விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆளுநர் சென்னா ரெட்டி உடனடியாக குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு சென்றார். அவ்வளவுதான், ஜெயலலிதா பொங்கியெழுந்துவிட்டார். ‘அவர் எப்படி செல்லலாம்’ என்று ஆளுநர் மீது புகார் தெரிவித்து அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு கடிதம் எழுதினார். சென்னா ரெட்டியும் அதற்கு பதில் அளித்து விளக்கம் கொடுத்தார். இதுதான் சென்னா ரெட்டி - ஜெயலலிதா இடையே மோதல் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த நிகழ்வு.

சென்னா ரெட்டி - ஜெயலலிதா மோதல்

பின்னர் சென்னா ரெட்டி ஆய்வுக்கு சென்றபோதும் கடும் எதிர்ப்பை ஜெயலலிதா பதிவு செய்தார். இருவருக்கும் இடையே இடையேயான மோதல் இந்திய அளவில் பிரபலமானது. 1993-இல் சென்னையில் வெடிகுண்டு சம்பவத்தை ஆளுநர் சென்னா ரெட்டி ஆய்வு செய்தது முதல் தொடங்கிய மோதல், கடைசியில் 1995-ல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கை பதிய ஆளுநர் அனுமதி அளித்த பிறகும் நீடித்தது. இந்த இடைப்பட்ட காலத்திலும் பிறகு சரி, பிறகும் சரி சென்னா ரெட்டியும் - ஜெயலலிதாவும் ஈகோ சண்டை நடத்தினார்கள். 1994, 1995-ஆம் ஆண்டுகளில் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை ஜெயலலிதாவும் அவருடைய அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தார்கள்.

சென்னா ரெட்டி - ஜெயலலிதா மோதல் இடைப்பட்ட காலத்தில்தான் புத்தாண்டில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆளுநர் உரை நிகழ்த்தாமல் கூட்டலாம் என்று மாற்றப்பட்டது. குடியரசு தின விழாவில்  ஆளுநர் கொடியேற்றும் விழாவை முதல்வர், அமைச்சர்கள் புறக்கணிப்பு செய்தனர். ஆளுநர் மாளிகை அருகே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமையிலேயே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரடியாக திண்டிவனம் அருகே சென்னா ரெட்டி காரில் வந்துகொண்டிருந்தபோது எல்.எல்.ஏ.க்கள் தலைமையில் அதிமுகவினர் நடத்திய போராட்டம் இந்திய அளவில் பேசு பொருளானது. அப்போது ஆளுநர் கார் மீது கற்கள், அழுகிய முட்டைகள், தக்காளியை அதிமுகவினர் வீசினார்கள். அதோடு நிற்கவில்லை. பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்து ஜெயலலிதா அதிர வைத்தார். ஆளுநர் மாளிகையில் மராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடிக்கப்பட்டது.

உச்சகட்டப் புகார்

இந்த மோதலின் திருப்புமுனையாக, தமிழக சட்டப்பேரவையில், ‘ஆளுநர் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்’ என்ற பகீர் புகாரை சென்னா ரெட்டி மீது ஜெயலலிதா சுமத்தினார். நீருப் பூத்த நெருப்பாக இருந்த இந்த மோதலின் உச்சமாக ஜெயலலிதா மீது எதிர்க்கட்சிகள் வழங்கிய ஊழல் புகாரில், சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த சொத்துக் குவிப்பு புகாரின் பேரில், ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி வழங்கி அதிரடித்தார். எல்லா ஊழல் வழக்குகளில் இருந்தும் விடுதலையான ஜெயலலிதாவால், சொத்துக் குவிப்பு வழக்கில் மட்டும் விடுதலை பெற முடியாமல், அது வாழ்நாள் முழுவதும் அவருக்கு நரகமானது. அதற்கு காரண கர்த்தாக இருந்தவர் சென்னா ரெட்டிதான்.

ஆளுநர் - முதல்வர் மோதல் இந்தியாவுக்கோ தமிழகத்துக்கோ புதிதல்ல. அந்த அளவுக்கு மோதலில் புது இலக்கணம் படைத்தது சென்னா ரெட்டி - ஜெயலலிதா மோதல்! 

click me!