பேரிடரில் உதவிக் கரம் நீட்டியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா..!ஆர்எஸ்எஸ் குரலாக ஆளுநர்...! வைகோ கண்டனம்

By Ajmal KhanFirst Published May 7, 2022, 1:41 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிர் இழந்த மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மத வேறுபாடு கருதாமல் துணிந்து முன் வந்தவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இளைஞர்கள்தான் என்பதை மக்கள் அறிவார்கள். சென்னை பெருமழை வெள்ளத்தில் மக்கள் தவித்த நேரத்தில் உதவிக் கரம் நீட்டியது அந்த அமைப்புதான். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்நோக்கத்துடன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஆபத்தான இயக்கம்; தீவிரவாத இயக்கம் என்று சாயம் பூச முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் குரலை எதிரொலிக்கும் ஆளுநர்

ஆளுநர் ரவி, தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடுகளுக்குக் குறுக்கே நிற்பதையும்,  இந்துத்துவக் கோட்பாட்டிற்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிவதையும், அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதிப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், எந்தத் தத்துவத்தின் சாயலும் தம் மீது படுவதற்கு இடம் தரக் கூடாது. ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, அரசு அமைப்புச் சட்டத்தின்படி கடமை ஆற்றாமல், அத்துமீறி செயல்பட்டு வருகின்றார். ஒன்றிய பா.ஜ,க, அரசின் முகவராக ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் குரலை எதிரொலிக்கின்றார். நாட்டின் 73 ஆவது குடியரசு நாள் விழாவுக்கு, ஆளுநர் விடுத்த வாழத்துச் செய்தியில், மும்மொழிக்கு ஆதரவான அறிவுறுத்தலை வழங்கினார். மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவை என்றும் சுட்டிக்காட்டினார். உலகப் பொதுமறை திருக்குறளை வேத சட்ட தத்துவத்தினுள் அடைக்க முயன்றார். மார்ச் மாதம் கோவையில், தென் மண்டல பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர், “கூட்டு ஆட்சி பற்றிப் பேசுபவர்கள், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்; இந்தியா என்பது வேறுபட்ட மக்களின் உடன்படிக்கையால் அமைந்தது அல்ல; இந்தியா என்ற நாடு 1947 ஆம் ஆண்டு பிறந்தது அல்ல” என்று குறிப்பிட்டார். இது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரின் குரல்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
உதகமண்டலத்தில் ஆளுநர் தன்னிச்சையாகக் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாடு குறித்து, தமிழ்நாடு அரசிடம் தகவல் கூடத் தெரிவிக்கவில்லை. இந்த மாநாட்டில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்துப் பேசினார். இந்தியா ஒரே நாடு; ஒரே குடும்பம் என்று குறிப்பிட்டு, இந்துத்துவ சனாதன சக்திகளின் ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்கிற கோட்பாட்டிற்கு வக்காலத்து வாங்கினார்.

மக்களுக்கு உதவி கரம் நீட்டிய   பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

 மீண்டும் “ஒரே பாரதம்; உன்னத பாரதம்” என்ற பிரதமர் மோடியின் கருத்தை வலியுறுத்தி, சென்னையில் மீன்வளத்துறை கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளார். தற்போது, சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து கடுமையான குற்றச் சாட்டுகளை முன்வைத்து இருக்கின்றார். “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு; மனித உரிமை அமைப்பு; மாணவர் இயக்கங்கள் போல் பல முகமூடிகளை அணிந்து கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகச் செயல்படுகிறது. ஆப்கானிஸ்தான், இராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிட ஆட்களை அனுப்புகின்றது. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டைச் சீர்குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருப்பது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்க்ள பேசுவது போல இருக்கின்றது. பொறுப்பு வாய்ந்த ஆளுநர். இவ்வாறு ஒரு சிறுபான்மை அமைப்பின் மீது வலிந்து குற்றஞ் சாட்டுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. சட்டத்திற்கு உட்பட்டு இயங்கி வருகின்ற  அமைப்பு ஆகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உயிர் இழந்த மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மத வேறுபாடு கருதாமல் துணிந்து முன் வந்தவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இளைஞர்கள்தான் என்பதை மக்கள் அறிவார்கள். சென்னை பெருமழை வெள்ளத்தில் மக்கள் தவித்த நேரத்தில் உதவிக் கரம் நீட்டியது அந்த அமைப்புதான்.

சட்டம் ஒழுங்கில் தலையிடுவது அத்துமீறல்

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்நோக்கத்துடன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை ஆபத்தான இயக்கம்; தீவிரவாத இயக்கம் என்று சாயம் பூச முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஆளுநர் கூறுவது உண்மையானால், சட்டப்படி நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டிக்க வேண்டியதுதானே? அதற்காகத்தானே ஒன்றிய பா.ஜ.க. அரசு தேசிய விசாரணை முகமை (NIA) எனும் அமைப்புக்கு அபரிதமான அதிகாரங்களை அளித்து இருக்கின்றது. அது மட்டும் அல்ல; தமிழ்நாட்டில் சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று, இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடு என்ற கருத்தை, பலமுறை பேசி இருக்கின்றார். இந்தியத் தொழில்துறையின் தலைநகரம்தான் தமிழ்நாடே தவிர, ஆளுநர் கருதுவது போல, மதவெறிக்கு இங்கே இடம் இல்லை; வட இந்திய மாநிலங்களைப் போன்ற மதவெறிச் சண்டைகளுக்கு, தமிழ்நாட்டு மக்கள் இடம் தர மாட்டார்கள். இங்கே அனைத்துத் தரப்பு மக்களும், அமைதியாக வாழ்கின்றனர். ஆளுநர் ரவி, தொடர்ந்து மாநில அரசின் செயல்பாடுகளுக்குக் குறுக்கே நிற்பதையும்,  இந்துத்துவக் கோட்பாட்டிற்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிவதையும், அரசு அமைப்புச் சட்ட நெறிகளைக் காலில் போட்டு மிதிப்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தமது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்; தேவையற்ற பிரச்சினைகளுக்கு இடம் தரக் கூடாது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என்பது, மாநில அரசின் அதிகாரம் ஆகும். ஆளுநர் தலையிட முயற்சிப்பது அத்துமீறல் ஆகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

click me!