
மும்பையிலிருந்து சென்னை வருவதற்கு முன் டெல்லி சென்று மீண்டும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துள்ளார்.
முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துள்ளார் சபாநாயகர். பெரும்பான்மையை நிரூபிக்க குறுக்கு வழியைக் கையாள்வதாகவும் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
நாளைவரை பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தைக் கூட்டக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தங்கள் தகுதிநீக்கம் செல்லாது என அறிவிக்கக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதனால் இந்த வழக்குகளிலெல்லாம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியபிறகுதான் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது தெரியவரும்.
இந்நிலையில், நேற்று தமிழகம் வருவதாக இருந்த ஆளுநர், டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து இன்று சென்னை வருகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதற்கிடையே மீண்டும் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இன்றும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தமிழக அரசியல் சூழலை எவ்வாறு சமாளிப்பது? எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுப்பது? ஆகியவை குறித்து விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.