"வார்டுக்கே நேரில் சென்று பார்த்தேன்" - கவர்னர் மகிழ்ச்சி

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 03:28 AM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
"வார்டுக்கே நேரில் சென்று பார்த்தேன்" - கவர்னர் மகிழ்ச்சி

சுருக்கம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்‍கு, சிறப்பான சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருவதாக, தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்‍கும் திரு. வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்‍கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களுக்‍கு, ஆளுநர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை இன்று விடுத்துள்ள செய்திக்‍குறிப்பில், முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்‍கு, தமிழக ஆளுநர் பொறுப்பு வகிக்‍கும் திரு. வித்யாசாகர் ராவ், இன்று காலை 11.30 மணியளவில் சென்று பார்த்ததாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்‍கு அளிக்‍கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்‍டர் பிரதாப் சி. ரெட்டி, ஆளுநருக்‍கு விரிவாக எடுத்துரைத்தார் - முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்‍கு, அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், இருதய சிகிச்சை நிபுணர், சுவாச சிகிச்சை மருத்துவர் உள்ளிட்ட மருத்துவக்‍குழு சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தார். 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்‍கு, தொடர்ந்து சுவாசம் மற்றும் ஃபிசியோதெரப்பி சிகிச்சைகள் அளிக்‍கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்‍கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, ஆளுநரிடம் விவரித்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சிகிச்சைக்‍கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதால், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் இருப்பதாக டாக்‍டர் பிரதாப் சி ரெட்டி ஆளுநரிடம் தெரிவித்தார்.  

ஆளுநர் திரு. வித்யாசகர் ராவ், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சிகிச்சை பெறும் வார்டுக்‍கு நேரடியாக சென்று பார்த்ததாகவும், முதலமைச்சர் நல்ல குணமடைந்து வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்‍கு சிறப்பான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ‍குழுவுக்‍கு, ஆளுநர் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக அப்பல்லோ மருத்துவமனைக்‍கு வந்த ஆளுநரை, மக்‍களவை துணை சபாநாயகர் டாக்‍டர் M. தம்பிதுரை, நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்‍கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. P. தங்கமணி, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்‍டர் C. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் டாக்‍டர் P ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் திருமதி. ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்‍டர் J. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்‍குறிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!