
தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், முதல்வர் ஒ.பி.எஸ்.சின் அடுக்கடுக்கான புகார்கள், ஆட்கொணர்வு மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவு ஆகியவற்றை அடுத்து தலைமை செயலாளர், காவல்துறை அதிகாரி ஆகியோருடன், கவர்னர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் டிசம்பர் 5க்கு பிறகு அரசியல் சூழ்நிலை தலைகீழ் ஆனது. பின்னர், பிப்ரவரி 5க்கு பிறகு, தறிக்கெட்டு ஓட துவங்கியுள்ளது. கடந்த டிசம்பர் 5ம் தேதி முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்சை ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா சட்டமன்ற அதிமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
2 நாள் மவுனம் காத்த ஓ,பி.எஸ். அதிரடியாக பேட்டி அளித்தார். இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டது. எப்படியும் நான் முதல்வர் ஆவேன், பொறுத்து இருந்து பாருங்கள் என்று ஓ.பி.எஸ். கூற, 6 எம்எல்ஏக்கள் திடீரென ஒ.பி.எஸ். பக்கம் தாவ, அவை தலைவர் மதுசூதனனே ஓடி வந்து ஆதரவு தர, ஒ.பி.எஸ். பக்கம் பெருகி வரும் ஆதரவை கண்டு, மிரண்டு போன சசிகலா தரப்பு, எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்தனர்.
அவர்கள் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ளதாக, ஒ.பி.எஸ். தரப்பும், எம்எல்ஏக்களின் உறவினர்கள் தரப்பும் புகார் அளித்தனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது.
நேற்று கவர்னரை சந்தித்த சசிகலா, தனது ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மறுபுறம், கவர்னரை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை, புகாராக கவர்னரிடம் அளித்தார். அதில், தனது ஆதரவு எம்எல்ஏக்களை, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், தன்னுடைய உத்தரவை ஏற்காத கமிஷனரை மாற்றம் செய்வது தொடர்பாகவும், எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டுள்ளதாக, 4 எம்எல்ஏக்கள் கொடுத்த புகார் மனுவையும் அளித்தார். இதையெல்லாம் கேட்டு கொண்ட கவர்னர் தமிழக அரசியலை உற்று நோக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை கவர்னர் அலுவலகத்தில் இருந்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஜார்ஜ், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி திரிபாதி, நுண்ணறிவு பிரிவு கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் உள்ளிட்டோருக்கு அவசர அழைப்பு அனுப்பப்பட்டது.
இதையடுத்து அனைவரும் அவசரம் அவசரமாக கவர்னர் மாளிகைக்கு வந்தனர். அவர்களுடன், கவர்னர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கவர்னருடைய ஆலோசனையில், எம்எல்ஏக்களை அடைத்து வைத்துள்ளதாக எழுந்த புகார் பற்றி, காவல்துறை மற்றும் தலைமை செயலாளரின் அறிக்கையையும், முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் புகாரின் அடிப்படையில் கமிஷனர் ஜார்ஜ் நடவடிக்கை குறித்தும் 4 எம்எல்ஏக்களின் புகார் பற்றியும் ஆலோசிப்பதாக தெரிகிறது.
இதுதவிர தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, தலைமை செயலாளர், காவல்துறை சார்பு எடுக்காமல் நடக்க வேண்டும் என்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
கூவத்தூரில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் குறித்து நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது பற்றியும் அலோசிக்கப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன், கூவத்தூரில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ஆலோசனையில் கூறியதாகவும் தெரிகிறது.