எத்தனை உயிர் இழப்புகள்... யார் பொறுப்பு..? அரசுகள் காட்டுகிற அலட்சியப்போக்கு... அருவருக்கத்தக்க அநாகரிகம்..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2020, 2:49 PM IST
Highlights

ஆதரிப்பார் யாருமின்றி அனாதைகளாய் கொத்தாய் மடிந்துபோன இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்கள், இனி சந்திக்கப் போகும் தாங்கொணாத் துயரங்கள், வெளியில் சொல்லி மாளாது. இந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பு...? 

ஆதரிப்பார் யாருமின்றி அனாதைகளாய் கொத்தாய் மடிந்துபோன இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்கள், இனி சந்திக்கப் போகும் தாங்கொணாத் துயரங்கள், வெளியில் சொல்லி மாளாது. இந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பு..? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் வருமான வரித்துறை ஓய்வு பெற்ற அதிகாரியும் எழுத்தாளருமான பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி. 

இதுகுறித்து அவர், ‘’எத்தனை உயிர் இழப்புகள்... யார் பொறுப்பு..? ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான குணம் - 'தார்மிகப் பொறுப்பு'. ஒரு காலத்தில் இது, இயல்பாகவே எல்லாரிடத்தும் இருந்தது. குடும்பத்தில் ஒருவர் தவறி விட்டால், அடுத்த நிலையில் இருப்பவர், தனது குழந்தைகளுடன் மறைந்தவரின் பிள்ளைகளையும் சேர்த்தே பராமரிப்பார்கள். யாரும் சொல்லி செய்வதில்லை; தாமாக முன்வந்து ஏற்றுக் கொள்வார்கள். இந்த தார்மீகப் பொறுப்புணர்வு, நம்முடைய மரபில் கலந்தது; உதிரத்தில் ஊறியது. அரசியலில் அதிகாரத்தில் இந்த நற்குணம் முற்றிலுமாக மறைந்து விட்டதாய்த் தோன்றுகிறது. ஆகப் பெரிய ஆபத்து இது. 

ஆந்திராவில் விசாகப் பட்டினத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் இறந்தனர். அதற்கு அடுத்த நாள் - மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்தே சென்ற தொழிலாளர்கள், களைப்புடன் ரெயில் பாதையில் படுத்து உறங்கினர்; சிறிது நேரத்தில் அவ்வழியே வந்த சர்க்கு ரெயில் அவர்கள் மீது ஏறிச் சென்றது; 16 பேர் உடல் சிதைந்து பலியாகினர். எந்த உயிர் இழப்புக்கும் யாரும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவில்லை. காரணங்கள் மட்டும் சொல்லப்பட்டன. 

விசாகை ரசாயனத் தொழிற்சாலையில் மின்சாரம் பழுது பட்டதாம்; ஏ.சி. சாதனம் நின்று போனதாம்; அதனால், 'ஸ்டைரீன்' வாயு கசிந்து விட்டதாம். ஆலையில் இருந்து 5 கி.மீ தூரம் வரையிலும் விஷவாயு பரவி இருக்கிறது. 11 மனித உயிர்கள்; நூற்றுக் கணக்கான கால்நடைகள்... பறி போயின. மின்சாரம் தடைப்பட்டால் ஏ.சி. நின்று போய் விடும் என்று தெரியாதா..? ஏ.சி. இயங்காத போது விஷவாயு கசியும் என்பது தெரியாதா..? பல்லாயிரம் கோடி ரூபாய் ஈட்டுகிற ஒரு நிறுவனம், மின் தடையின் போது உடனே செயல்படுகிற 'ஜெனரேட்டர்' நிறுவி இருக்க முடியாதா..? இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயப் படுத்தி இருக்க முடியாதா...? 

இதுதான் போகட்டும்; இப்படியொரு நிலை வந்தால் உடனே நடவடிக்கை எடுத்து குறைந்த பட்சம் தகவல் சொல்லக் கூடவா ஒருவரை அந்த நிறுவனம் நியமிக்காமல் இருக்க முடியும்..? விஷ வாயு, 5 கி மீ தூரம் பரவி, பலர் உயிர் துறந்த பிறகும் கூட ஆலை நிர்வாகம் எதுவுமே செய்யவில்லை. காலை 11 மணிக்கு, வாயுக் கசிவு நிறுத்தப்பட்டதாகக் காவல்துறைத் தலைவர் கூறினார். ஆலையின் உயர் நிர்வாகிகள் எங்கே போனார்கள்..?  நமக்குத் தெரிந்து இது வரையில் யாரும் கைது செய்யப் பட்டதாகச் செய்திகள் இல்லை. என்னதான் நடக்கிறது...? யாருக்கும் எந்தப் பொறுப்பும் இல்லை!

ரெயில் மோதி தொழிலாளர்கள் பலியான சம்பவம் பதைபதைக்க வைக்கிறது. மகராஷ்டிராவில் இருந்து மத்தியப் பிரதேசம் வரை நடந்து சென்ற தொழிலாளர்களை யாருமே நிறுத்தி, வாகனத்தில் அனுப்ப முயற்சிக்கவே இல்லை. கேட்டால், 'தக்க அனுமதி' இல்லாமலே சென்றவர்களாம்! கலெக்டர் அலுவலகத்தில் கூடி 'பாஸ்' கேட்டு இருக்கிறார்கள். கிடைக்கவில்லை; 'விதி விட்ட வழி' என்று கிளம்பி விட்டார்கள். 'போய் சேர்ந்து' விட்டார்கள். 
 
யார் இவர்களை வேலையில் அமர்த்தி, குறைந்த ஊதியத்தில் இவர்களின் உழைப்பை சுரண்டினார்களோ. அவர்களில் யாரும் உதவ முன் வரவில்லை. 'உலகத் தொழிலாளர்களே...' என்று விளிப்பவர்கள் கூட, இவர்களை, 'மாநிலத் தொழிலாளர்கள்' என்றுதான் 'இனம்' பிரித்துப் பார்க்கிறார்கள். என்ன செய்ய..? ஆதரிப்பார் யாருமின்றி அனாதைகளாய் கொத்தாய் மடிந்துபோன இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்கள், இனி சந்திக்கப் போகும் தாங்கொணாத் துயரங்கள், வெளியில் சொல்லி மாளாது. இந்தக் கொடுமைக்கு யார் பொறுப்பு...? 

அறிவுரைகள், ஆலோசனைகள், அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள்.... தலைவர்களின் பணி முடிந்து விட்டது. வரிசையில் நிற்க வைத்து, 'முத்திரை' குத்தி அனுப்புவதோடு அதிகார வர்க்கம் ஒதுங்கி விடுகிறது. இலவசமாக சாப்பாடு பொட்டலம் கொடுத்து 'போட்டோ' எடுத்துக் கொண்டால் போதும்; சமூக வலைத்தளங்களில் பெரிதாகப் போட்டு சமூக ஆர்வலர்கள் புளங்காங்கிதம் அடைந்து போகிறார்கள். அடிமாடாய் உழைத்த 'வெளிமாநில' தொழிலாளர்கள் கடந்த சுமார் 40 நாட்களாகப் படும் பாடு, சுதந்திர இந்தியாவில் அதிகார வர்க்கம் (bureacracy) மனித உணர்வுகள் அற்று மரத்துப் போனதன் வெளிப்பாடு. அரசியல் தலைமை, அரசுகளின் தலைமை - காட்டுகிற அலட்சியம், மன்னிக்கவும், அருவருக்கத்தக்க அநாகரிகம்.

 

                                    பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி...

காட்டமாக எழுதுவது எனது நோக்கம் அன்று; உதவி செய்ய இயலாத கையறு நிலையில் நாம் இருக்கிறோமே... என்கிற ஆற்றாமை இது. நீங்களும் நானும் இப்படிப் பரிமாறிக் கொள்வதைத் தாண்டி என்ன செய்து விட முடியும்..? இனியேனும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பிரசினைகளை மனிதாபிமானத்துடன் அணுகுகிற போக்கு உருவாகுமா..?’’என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!