
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பாதிப்பை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆனால் சென்னையைவிட அதிகமாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படவில்லை.
கனமழை பாதிப்பு:
கடந்த மாதம் 27-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியது முதல் ஒருவாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வடகடலோர மாவட்டங்களிலும் நாகை, திருவாரூர் ஆகிய கடலோர டெல்டா மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையால் சென்னை நகர்ப்பகுதியிலும் புறநகர்ப் பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து உடனடியாக தண்ணீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பாதிப்பு பணிகளை பார்வையிட ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
சென்னையைக் காக்க ஆலோசனை:
இன்றிலிருந்து மீண்டும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால், கனமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
மூழ்கிய பயிர்கள்:
ஆனால், சென்னைக்கு நிகராகவும்.. சொல்லப்போனால் சென்னையைவிட கடுமையாக பாதிக்கப்பட்டவை நாகை, திருவாரூர் மாவட்டங்கள். நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் கனமழையால் 3 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இன்னும் பல வயல்களில் தண்ணீர் முழுமையாக வடிந்த பாடில்லை. கடந்த ஆண்டு வறட்சியால் விளையவில்லை. இந்த ஆண்டு கனமழையால் பயிர்கள் மூழ்கிவிட்டன என விவசாயிகள் கதறுகின்றனர்.
தூர்வாராததுதான் காரணம்:
வடிகால் வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் தண்ணீர் வயலுக்குள் வந்திருக்காது எனவும் வாய்க்கால்களை தூர்வாரததே பயிர்கள் மூழ்கியதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வாய்க்கால்களைக் கூட தூர்வாராத நிலையில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகளைத் தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட 400 கோடி ரூபாய் நிதி, என்ன ஆனது? என்ற கேள்வியையும் விவசாயிகள் எழுப்புகின்றனர்.
அமைச்சரின் அலட்சியம்:
கடந்த ஆண்டு வறட்சியாலும் இந்த ஆண்டு கனமழையாலும் கடுமையாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல், திக்கற்று திணறி நிற்கின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, பருவமழையால் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என அலட்சியமாக கருத்து தெரிவித்துள்ளார்.
”வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது” போன்ற அமைச்சரின் இந்த பேச்சு, விவசாயிகளிடையே ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தியது.
விவசாயத்தையும் விவசாயியையும் காக்க நடவடிக்கை தேவை:
இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் முதல்வரும் அமைச்சர்களும் டெல்டா மாவட்டங்களையும் விவசாயிகளையும் காக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவில்லை.
கனமழை அபாயம் இல்லாத சேலம் மாவட்டத்தில் மழையே பெய்யாத நாளில், ஆட்சியருடனும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, தமிழ்நாட்டிற்கே.. ஏன் இந்தியாவிற்கே சோறு போடும் டெல்டா மாவட்டங்களை கண்டுகொள்ளவில்லை.
டெல்டா மாவட்ட விவசாயத்தையும் விவசாயிகளையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் பெய்யும் மழையிலிருந்தாவது அம்மாவட்ட மக்களையும் விவசாயிகளையும் காக்க அக்கறையுடன் அரசு செயல்பட வேண்டும் என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கை.