
நீட் தேர்வு மசோதா
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை நிராகரித்து தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக ஆளுநர் பரிசீலித்து குடியரசுத்துலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் ஆனால் இதுவரை எந்தவித முடிவும் எடுக்காமல் உள்ளார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் கடந்த வாரம் ஆளுநரை சந்தித்து நீட் தேர்வு தொடர்பாக மசோதா மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆளுநரும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
ஆளுநருடன் சந்திப்பு
தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் தமிழக அரசியல் கட்சிக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் நீட் தேர்வு மசோதா மீது உரிய நவடிக்கையை ஆளுநர் எடுக்கவில்லையென கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்து இருந்தன. இந்தநிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், இன்று காலை ஆளுநர் ரவியை ராஜ்பவனில் சந்தித்து பேசினர். அப்போது நீட் மசோதா தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நீட் மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் மசோதா மீது நடவடிக்கை எடுக்க எந்தவித கால அவகாசம் எதுவும் இல்லையென்று ஆளுநர் தெரிவித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது தொடர்பாக தகவலை தெரிவித்துள்ளனர்.
தேநீர் விருந்தை புறக்கணித்த முதலமைச்சர்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மாணவர்கள் நலனுக்காக நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 208 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த மசோதா மீது உரிய நடவடிக்கை ஆளுநர் எடுக்கவில்லை, சட்டமன்ற மான்பை ஆளுநர் காக்கவில்லை என கூறினார், எனவே ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். இதனால் தமிழக அரசு- தமிழக ஆளுநர் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.