தமிழகத்தின் அரசுப்பணிகள் தமிழருக்கே.. கொளுத்திப்போடும் வேல்முருகன்.. அரசுக்கு எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 10, 2020, 3:08 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது.
 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது. எனவே, தமிழக அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழக அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல் முருகன் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை,  நெய்வேலி அனல் மின் நிலையம், பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள், ஜிப்மர் மருத்துவமனை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி –சரக்கு சேவை வரி, சுங்க வரி போன்ற நடுவண் வரித்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் முதலியவற்றில், மத்திய  அரசு திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணித்து, வட மாநிலத்தவரையும் மற்ற வெளி மாநிலத்தவரையும் வேலையில் சேர்த்து வருகிறது. 

தமிழகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் மத்திய அரசின் இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழகத்தில் இருந்து இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கே வழங்க வேண்டும். ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு வேலைகள் பறிபோவது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வு பெற்ற 2 ஆண்டுகளில் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு அலுவலகங்களிலும் கடைநிலைப் பணியாளர் இடத்திற்கு கூட பிற மாநிலத்தவர்களை சேர வழி வகுத்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். 

தமிழக வேலை தமிழருக்கே என்ற முழக்கத்தை முன் வைத்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.  குறிப்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவகத்தின் முன்பு போராட்டம், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கோட்டையை முற்றுகையிட்டது என பல்வேறு போராட்டங்களை குறிப்பிடலாம். ஆனாலும் தமிழக வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது. 

எனவே, தமிழக அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழகத்திலுள்ள மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழக அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்ற அவசர சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்கு காட்டும் பட்சத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி மீண்டும் மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன் எடுக்கும் என்பதை தமிழக அரசுக்கு நினைவுப்படுத்துகிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 

click me!