
சாட்டை துரைமுருகனை பழிவாங்கும் போக்குடன் அவர் மீது குண்டர் சட்டம் போட்டுள்ளது என்றும் இது திமுக அரசின் அதிகார வெறியாட்டம், பாசிசத்தின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலம்தொட்டு மழைவெள்ளம் முதல் அரசின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது. அதேபோல் மத்திய அரசிடம் போராடி போதிய அளவில் மக்களுக்கு தடுப்பூசி பெற்று அதை உடனுக்குடன் மக்களுக்கு செலுத்தும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் அரசுக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்புவோர் மீது கைது நடவடிக்கை பாய்ந்து வருகிறது. முன்னதாக தொடர்ந்து அரசுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வந்த பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன், பாஜகவுக்கு ஆதரவாக கருத்து கூறி வரும் கிஷோர் கே.சாமி, யூடியூபர் மாரிதாஸ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். அதில் கிஷோர் கே ஸ்வாமி மற்றும் மாரிதாஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் திமுக தலைவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வந்த நாம் தமிழர் கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதிலிருந்து அவர் விடுதலையான நிலையில், சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் பெண் ஊழியர்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் தரமற்ற உணவை சாப்பிட்டு அதில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் பின் குணமடைந்தனர். ஆனால் இதுகுறித்து சமூகவலைதளத்தில் சாட்டை துரைமுருகன் தவறான வதந்திகளை பரப்பியதாக திருச்சி போலீசார் அவரை கடந்த 19ஆம் தேதி கைது செய்தனர். எட்டு பிரிவுகளில் அவர் மீது திருவள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி வருண்குமார் பரிந்துரைத்தார். அதன் பேரில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கிஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் கிளை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இது நாம் தமிழர் கட்சியின் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடரப்பட்ட புனைவு வழக்குகளில் பிணையில் வெளிவந்துவிடக்கூடாது என்ற குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சமாகும்.
தம்பி துரைமுருகன் சமூக ஊடகம் மூலம் ஏற்படுத்தும் அளப்பரிய தாக்கத்தைச் சகிக்க முடியாது, சிறைதண்டனை மூலம், அவரை உளவியலாக அச்சுறுத்தி முடக்க நினைக்கும் திமுக அரசின் கொடுங்கோன்மைபோக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டோரை, அரசியல் விமர்சனம் செய்பவரை, ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அதிகார அத்துமீறலுக்கு எதிராகவும் அறத்தின் பக்கம் நின்று குரல் எழுப்புவோரையும் தொடர் சிறைவாசம் மூலமாகச் சித்ரவதை செய்து, தனக்கு எதிராக எவ்வித எதிர்க்கருத்தும் எழவேக்கூடாது என்கின்ற ஆளும் திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையால், சனநாயக மாண்புகளும், கருத்துரிமையும் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறது. சனநாயக விழுமியங்களின் மீது பற்றுறுதி கொண்டவர்கள் கருத்துரிமைக்கு எதிரான ஆளும் கட்சியின் இதுபோன்ற கொடுங்கோல்போக்கினை எதிர்த்துப்போராட எதிராகக் குரல் கொடுக்க அணிதிரள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.