கூகுள் நிறுவனம் இந்தியாவில் 75,000 கோடி முதலீடு செய்யும் என சுந்தர் பிச்சை அறிவிப்பு: கை கொடுத்த தமிழர்.

By Ezhilarasan BabuFirst Published Jul 13, 2020, 5:24 PM IST
Highlights

இந்தியாவின் விவசாயிகள் இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம்.

இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் 75 ஆயிரம் கோடி  ரூபாய் முதலீடு செய்யும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இந்தியாவின் டிஜிட்டல் மேம்பாட்டிற்கு உதவும் வகையில் இந்த நிதியை அறிவிப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதுடன், மிகுந்த பெருமிதம் கொள்வதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சையுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் உரையாற்றினார். அந்த உரையாடலுக்குப் பின்னர் இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கூகுள் முதலீடு செய்யும் என சுந்தர்பிச்சை அறிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  கூகிள் ஃபார் இந்தியா டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முயற்சியின் கீழ், அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களை அதாவது 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்த முதலீட்டை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் டிஜிட்டல் மயத்தில் நான்கு முக்கிய பிரிவுகளில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார். முதலாவதாக, இந்தி, தமிழ், பஞ்சாபி என ஒவ்வொரு இந்தியரும் எளிமையான முறையில் அவரவரது மொழியில் தொழிநுட்பத்தை பயன்படுத்துதல். இரண்டாவதாக, இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல். மூன்றாவதாக, எளிமையான முறையில் வணிகங்களை மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், மற்றும் எளிமையாக்குதல், நான்காவது, சுகாதாரம், கல்வி மற்றும் வேளாண்மை போன்ற துறைகளில் சமூக நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் AI-ஐ மேம்படுத்துதல், என கூகுள் நிறுவனத்தில் மற்றொரு அறிக்கை தெரிவித்துள்ளது. பின்னர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள இந்திய பிரதமர் மோடி, கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உடனான உரையாடல் வெற்றிகரமாக அமைந்தது.

மேலும், இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். அப்போது கூகுள் பல துறைகளில் செய்துவரும் அளப்பரிய பணிகள் குறித்து சுந்தர் பிச்சையிடம் கேட்டு அறிந்து கொண்டேன். குறிப்பாக கல்வி கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் கட்டணம் உள்ளிட்ட பல துறைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் சுந்தர் பிச்சை உடன் விவாதித்தேன். சுந்தர் பிச்சை உடனான உரையாடலின்போது கொரோனா காலத்தில் உருவாகிவரும் புதிய வேலை கலாச்சாரம் பற்றிப் பேசினேன். இந்த தொற்றுநோய் நாட்டில் ஏற்படுத்தியுள்ள சவால்கள் குறித்தும் இருவரும் விவாதித்தோம். மேலும் தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேசினோம் என மோடி தெரிவித்துள்ளார்.  

 

click me!