தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 12.5 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைத்துள்ளது. எனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது, இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தங்கத்தின் தேவை குறைந்ததையடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்ததாக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம், வேலையில்லா திண்டாட்டம், உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
undefined
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு சாதக பாதகங்கள் இடம்பெற்றுள்ளன. 2021 பட்ஜெட்டில் சில பொருட்களின் மீது அரசு அதிக வரிச் சலுகையும், சில பொருட்களின் மீது அதிக வரிவிதிப்பு செய்திருப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் உருவாகியுள்ளது. சில பொருட்களின் விலை பன்மடங்கு உயரும், அதேநேரத்தில் பெரும்பாலான பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக தங்கம், வெள்ளி, இரும்பு தகரம், நைலான் துணிகள், மின்சாரம், காப்பர் பொருட்கள், எஃகு பொருட்கள், போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 12.5 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவீதமாக குறைத்துள்ளது. எனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் தாமிரத்திற்கான இறக்குமதி வரி 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல தோல் பொருட்களின் மீதான விலையும் குறைய வாய்ப்புள்ளது. விலை உயர்வதற்கான பொருட்களின் பட்டியலில், மொபைல் போன்கள் மற்றும் அதற்கு தேவையான உதிரிபாகங்கள், சார்ஜர்கள், ஹெட்போன்கள், எலக்ட்ரானிக்கல் பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் துணிகள், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்கள், குறிப்பாக சோயாபீன் மற்றும் சன் பிளவர் ஆயில், ஆப்பிள், நிலக்கரி, லிக்னைட், யூரியா, உரங்கள், பட்டாணி, வெள்ளை கொண்டைக்கடலை, இதுதவிர இறக்குமதி செய்யப்படும் சில பருப்பு வகைகள், இறக்குமதி செய்யப்படும் லெதர் ஷூ, பெட்ரோல், டீசல் மதுபானங்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விலை உயர வாய்ப்புள்ளது.
பெட்ரோலுக்கு லிட்டருக்கு 2.5 ரூபாய் வரி உயர்த்தப்பட்டுள்ளது. டீசலுக்கு லிட்டருக்கு முறையாக நான்கு ரூபாய் வரி உயர்த்தப்பட்டுள்ளது. சில மொபைல் உதிரி பாகங்களுக்கு 2.5% வரி உயர்த்தப்பட்டுள்ளது, சோலார் இன்வெர்டர் களுக்கு 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. வாகன உதிரி பாகங்கள் மீதான சுங்க வரியை 15 சதவீதமாக அரசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.