அடிதூள்.. கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக வீழ்ச்சியடையும்.. இந்திய விஞ்ஞானிகள் கணிப்பு..

By Ezhilarasan BabuFirst Published Apr 3, 2021, 11:15 AM IST
Highlights

இந்நிலையில் ஆறுதலான தகவல் ஒன்றை கான்பூர் ஐஐடி சேர்ந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதாவது சுத்ரா என்ற கணித மாதிரியை பயன்படுத்தி கொரோனா வைரஸின் போக்கை கணித்துள்ளனர்.  

கொரோனா இரண்டாவது அலை முதல் அலையைப் போல் இல்லாமல், வரும் மே  மாதத்திற்குள் வீழ்ச்சி அடையும் என இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அது உச்சம் அடையும் என அவர்கள் கூறியுள்ளனர். 

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மூலம் கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைந்து வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், அதன் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாவது அலை புதிய அவதாரம் எடுத்து மக்களை மிக மோசமாக தாக்கி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்து 827 ஆக அது உயர்ந்துள்ளது. இதனால் ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.  நேற்று ஒரேநாளில் 202 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேபோல பஞ்சாப்பிலும் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவிவருகிறது. 

இந்நிலையில் ஆறுதலான தகவல் ஒன்றை கான்பூர் ஐஐடி சேர்ந்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதாவது சுத்ரா என்ற கணித மாதிரியை பயன்படுத்தி கொரோனா வைரஸின் போக்கை கணித்துள்ளனர். இது முதல் அலையை போல் இல்லாமல் ஒரு சில மாதங்களிலேயே வீழ்ச்சியை சந்திக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. முதல் அலையின் போது இதே முறையை பயன்படுத்தி கொரோனா வைரஸ் போக்கு கணிக்கப்பட்டது. அது ஆகஸ்ட், செப்டம்பரில் உச்சமடைந்து 2011 பிப்ரவரி மாதம் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டது. இதேபோல இரண்டாவது அலையின் போக்கும், மூன்று வகையான அளவிட்டு முறைகளை பயன்படுத்தி ஆராயப்பட்டதில், இந்தியாவின் இரண்டாவது அலை இந்த மாதத்தின் மத்தியில் உச்சம்பெற்று மே மாத இறுதியில் வீழ்ச்சி அடையும் என விஞ்ஞானிகள் குழு கணித்துள்ளது. 

வைரஸ் உச்சநிலையை அடையும் போது  நாளொன்றுக்கு  தொற்று 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்றும், நோய்த்தொற்று மற்றும் அதன் சரிவில் ஏற்ற இறக்கம் நம்ப முடியாத அளவிற்கு இருக்குமென்றும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதன் வேகம் தீவிரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் இந்த வைரஸை கண்டு அஞ்சிவரும் நிலையில் இதன் வீழ்ச்சி மிக வேகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல அரியானா மாநிலத்தில்  அசோகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலும் இதே முடிவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் நாட்டு மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.  

 

click me!