
கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு இல்லை என்று உறுதியாகக் கூறமுடியாது என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மூலம் கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைந்து வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், அதன் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் பெரு நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.
இதை தடுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாவது அலை புதிய அவதாரம் எடுத்து மக்களை மிக மோசமாக தாக்கி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 47 ஆயிரத்து 827 ஆக அது உயர்ந்துள்ளது. இதனால் ஒருநாள் பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. நேற்று ஒரேநாளில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு நிலைமை கைமீறி சென்றுள்ளதால், அதை தடுப்பது குறித்து நோய் தடுப்பு நிபுணர்களுடன் மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். நேற்றிரவு சமூக வலைதளம் மூலம் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மகாராஷ்டிராவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது.
நோய்த்தொற்று பரவல் ஆபத்தான நிலையில் உள்ளதால், சுகாதார கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகுந்த சவாலாக மாறும் அபத்து உள்ளது. நாட்டின் மொத்த தொற்று விகதத்தில் 50 சதவீதத்திற்கு மேல் மகாராஷ்டிராவில் உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு விரும்பவில்லை, நானும் அதே யோசனையில் தான் உள்ளேன். ஆனால் ஊரடங்கு இல்லை என்று உறுதியாகக் கூறமுடியாத. கொரோனாவை கட்டுப்படுத்த இன்னும் ஒரு சில நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மாநில பொருளாதாரத்தை அரசு காக்க வேண்டிய சூழல் உள்ளது. அதைபோல மக்களின் உயிர், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய அவசியமும் உள்ளது. மக்களின் உயிரைக் காக்க நான் வில்லனாக மாறத் தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.