
தமிழக அரசியலில் ‘வாரிசு அரசியல்’ என்கிற கான்செப்ட் அதிர்ச்சியில்லை! ஆனால் வாரிசாக களமிறங்கியவர்கள் தனது வழிகாட்டி போல் வெற்றித் தடம் பதித்தார்களா? என்பதுதான் அவசியமான கேள்வி, அதற்கான வேதனையான பதில் ‘இல்லை’ என்பதுதான்.
தமிழகம் எத்தனையோ அரசியல் வாரிசுகளை பார்த்திருந்தாலும் கூட ஜி.கே.வாசன் முக்கியமானவர். காரணம்?...பிரதமர் பதவிக்கே பெயர் பரிந்துரைக்கப்படுமளவுக்கு பெரும் செல்வாக்கை படைத்திருந்த மூப்பனாரின் மகனல்லாவா! கருணாநிதியும், ஜெயலலிதாவும் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் கூட மூப்பனாரை பார்த்து மிரண்டனர். காரணம் காங்கிரஸில் அவருக்கு இருந்த செல்வாக்கு. இன்று ஆன்மிக அரசியலுக்கு தயாராகும் செய்யும் ரஜினியெல்லாம் அன்று பம்மி வளைந்த அரசியல் ஆளுமை மூப்பனார்தான்.
அந்த வகையில்தான் அவரது வாரிசான வாசன் முக்கியத்துவம் பெறுகிறார். தமிழகத்தில் மூப்பனாருக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் முக்கியத்துவம் வாசனுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மை. அதற்கு அவருடைய அரசியல் காய் நகர்த்தல்களே முழு காரணம். காங்கிரஸுடனும் அவருக்கு கட்டுப்படியாகவில்லை, த.மா.கா. சைக்கிளை மீண்டும் தூசி தட்டி ஓட்டிய பின்னும் ஒப்பேறவில்லை.
வாசன் பின்னால் த.மா.கா.வில் வலுவாய் நின்ற பல தலைவர்கள் பிழைப்பு தேடி மீண்டும் காங்கிரஸிலோ அல்லது பிற திராவிட இயக்கங்களிலோ கரைந்து கொண்டார்கள். ஆனால் வாசன் இன்னமும் சைக்கிளை மேடேற்ற வழியின்றி நிற்கிறார்.
நிச்சயம் கூட்டம் சேராது! எனும் நிலையில் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கும் வாசன் வெறுமனே கொடியேற்றுதல், பிரஸ்மீட், அறிக்கை அரசியல் என்று காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்காக அவர் வெளியிட்டிருக்கும் ரமணா ஸ்டைல் புள்ளிவிபர அறிக்கையை பார்த்து, மத்திய புள்ளியியல் துறை அமைச்சராக இருந்த வாசனின் அரசியல் நிலை இப்படியா போக வேண்டும்? என கன்னத்தில் கை வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
“தமிழ்நாட்டில் மொத்தம் 68 ஆயிரம் சத்துணவு மையங்கள், 35 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள், 37 ஆயிரம் குறு அங்கன்வாடி மையங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. இவற்றில் ரெண்டரை லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
அவர்களுக்கெல்லாம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டுமென 110 விதியின் கீழ் முதல்வராக இருந்த ஜெயலலிதா விடுத்த அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார் வாசன்.
தினப்படி அரசியல் அப்டேஷனுக்காக வாசன் விடும் இந்த மாதிரியான ‘உள்ளேன் ஐயா!’ அறிக்கைகள் அவரை அய்யா! அய்யா! என்றழைக்கும் கூட்டத்தின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வருவதாக குத்திக் காட்டுகின்றனர் விமர்சகர்கள்.
பாவம்தான் வாசன்!