ஜி.கே. வாசனை டீலில் விட்ட அதிமுக... கூட்டணியிலிருந்து விலகுகிறதா தமாகா..?

By Asianet TamilFirst Published Mar 11, 2021, 8:56 AM IST
Highlights

அதிமுக 171 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், அதிர்ச்சியடைந்துள்ள தமாகா, கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தேமுதிகவுக்கு 13 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்க முன் வந்ததால், கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேறியது. இதேபோல அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் வரை எதிர்பார்த்த ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு சீட்டுகளை அதிமுக வழங்காததால், அந்தக் கட்சியும் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்தது. இந்நிலையில் தமாகாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணியில், அதிமுகவுக்கு அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி தர மாட்டோம் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தொடக்கத்திலேயே அறிவித்தார். அதேபோல அதிமுகவின் முதல்வர் வேட்பாளரையும் அந்தக் கட்சிதான் முதன் முதலாக ஏற்றுக்கொண்டது. இப்படி அதிமுகவுக்கு அனுசரனையாக இருந்துவரும் தமாகா, கூட்டணியில் 12 தொகுதிகளை எதிர்பார்த்தது. ஆனால், அந்தக் கட்சிக்கு 5 அல்லது 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கும் என்று அதிமுக தரப்பில் தகவல்கள் வெளியாகின. 
இந்நிலையில் கூட்டணி இறுதியாகாத நிலையில் அதிமுக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. அதிமுக நடந்துகொண்ட விதம் தமாகாவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் நீடிப்பதா என்ற நிலைக்கு தமாகா வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் ராஜ்ய சபா தேர்தலில் ஜி.கே. வாசனுக்கு அதிமுக எம்.பி. பதவியை வழங்கியதால், என்ன முடிவை எடுப்பது என்று தெரியாமல் ஜி.கே. வாசன் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து இன்று ஆலோசனை நடத்த உள்ளார் ஜி.கே. வாசன். அதைதொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடிப்பதா, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதா என்ற முடிவை தமாக எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!