
தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் ஓய்வு ஆகிய காரணங்களால் தமிழகர் அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த வெற்றிடத்தை நிரப்ப நான், நீ என கட்சித் தலைவர்களும் நடிகர்களும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர்.
தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்படவில்லை என அதிமுக, திமுகவினர் தெரிவித்துவருகின்றனர். ஆனால் ரஜினி, கமல் ஆகியோர் தங்களது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டனர். கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடப் போவதாக இருவருமே அறிவித்துவிட்டனர்.
திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தவிர அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரனும் தீவிரமாக அரசியல் களத்தில் செயல்பட்டு வருகிறார். அவர்கள் தவிர ரஜினி, கமலும் அரசியல் பிரவேசம் எடுக்கின்றனர். நாம் தமிழர் கட்சி, பாமக ஆகிய கட்சிகள் மாற்று அரசியலை முன்னெடுத்து வருகின்றன. அதுபோக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் என பல கட்சிகள் களத்தில் உள்ளன. காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் உள்ளது.
இவற்றில், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் திமுகவிற்கு ஆதரவு அளித்து வருகின்றன. ரஜினியும் கமலும் அரசியல் களம் காண்பதால், மற்ற கட்சிகளிலிருக்கும் ரஜினி, கமலின் வாக்குகள் பிரியும். எனவே எதிர்காலத்தில் அரசியல் கட்சி, தமிழகத்தில் கூட்டணி அமைக்காமல் தனித்து ஆட்சி அமைக்க முடியுமா என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் இனி எந்த கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலையை பொறுத்து தமாகா கூட்டணி அமைக்கும் என தெரிவித்தார்.