பெரிய கட்சிகளுக்குக் கை கொடுத்து சிறிய கட்சிகளை காலால் எட்டி உதைப்பதா..? தற்கொலைக்கு சமம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 18, 2021, 1:04 PM IST
Highlights

ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு நாட்டின் ஏகோபித்த தலைவராக கொண்டாடப்படுகிற யாராலும் அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அல்லது முற்றிலுமாக நிறைவேற்றுவதோ முடியாது. 

இந்திய ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த அம்சம் என்றால் அது, பல கட்சி அமைப்பு முறையாக இருப்பது தான். எண்ணற்ற கட்சிகள் களத்தில் இருப்பதைப் பெரும் குறையாக சொல்வோரும் உண்டு. மன்னிக்கவும்; அவர்கள் ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் புரியாதவர்கள். ஒரு களத்தில் போட்டியிடுவோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, வாக்காளர்களுக்கான தெரிவுகளின் எண்ணிக்கையும்  அதிகரிக்கிறது. பல கட்சிகளின் இருப்பு உண்மையில் பன்முகங்களின் பிரதிபலிப்பு. 

மிகப்பெரிய இரண்டு கட்சிகள் மட்டுமே கொண்ட களத்தில், மூன்றாவது தெரிவுக்கான உரிமை முரட்டுத்தனமாக வெளியே தூக்கி எறியப்படுகிறது. பெரிய ஜனநாயக நாடுகளில் இது, ஏறக்குறைய எழுதப்படாத சட்டம் ஆகி வருகிறது. ஜனநாயகத்திற்கான உண்மையான ஆபத்து இங்கேதான் ஒளிந்து கிடக்கிறது. சிறிய கட்சிகள், உள்ளூர் அமைப்புகள், வட்டாரத் தலைவர்கள், பொதுநலக் குழுக்களின் பிரதிநிதிகள் போட்டியிட இயலாத தேர்தல் களம், சாமானிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்க இயலாது. 

ஒரு மாநிலத்தின் அல்லது ஒரு நாட்டின் ஏகோபித்த தலைவராக கொண்டாடப்படுகிற யாராலும் அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவோ அல்லது முற்றிலுமாக நிறைவேற்றுவதோ முடியாது. சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் தான் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக அவையில் நடந்து கொள்ள முடியும்; செயலாற்ற முடியும். இந்த அடிப்படை உண்மையைத் தேர்தல் ஆணையம் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆணையம் பரிந்துரைக்கும் விதிமுறைகள் எல்லாமே பெரிய கட்சிகளுக்கு ஆதாயமாக இருக்கின்றன; சிறிய கட்சிகளை துவம்சம் செய்கின்றன. சற்றும் சமமற்ற போட்டிக்கு வழி வகுத்து விட்டு, சுதந்திரமான நியாயமான தேர்தல் நடைபெறுவதாய்ப் பீற்றிக்கொள்ளுதல், மக்களை ஏமாற்றுகிற செயல்; கடைந்தெடுத்த மோசடித்தனம். 

பெரிய கட்சிகளுக்குக் கை கொடுத்து தூக்கி விடுகிற, சிறிய கட்சிகளை காலால் எட்டி உதைக்கிற விதிமுறைகள், மக்களாட்சித் தத்துவத்தை அழித்துவிடும். தேர்தலில் வாக்களிப்பது மட்டுமல்ல; தேர்தலில் போட்டியிடுவதும் ஜனநாயக உரிமை. வாக்களிக்க வாருங்கள் என்று கூவிக் கூவி அழைக்கிற ஆணையம், 'இது உங்கள் களம்; தாராளமாக போட்டியிட வாருங்கள்' என்று ஒரு போதும் கூறுவதே இல்லை. ஓரிரு தலைவர்களின் தணியாத பதவி ஆசைக்காக, பல கோடி மக்களின் ஜனநாயக உரிமை, பகடைக்காய் ஆக விடலாமா? மக்களால் மக்களுக்காக மக்களின் உரிமைக் களமாக  இருக்கவேண்டிய பொதுத்தேர்தல், தலைவர்களால் தலைவர்களுக்காக தலைவர்களின் சூதாட்ட மேடையாக மாறி இருப்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? குறைந்த பட்சம், ஆணையம் இதை கவனித்து இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் இந்திய ஜனநாயகம் மேலும் மேலும் கேலிக்கு உள்ளாக்கப்படுகிறது.

உடனடியாக இந்த அபாயப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ஜனநாயகத்தின் தற்கொலைக்குச் சமம். யார் காதிலேனும் விழுகிறதா? 

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

click me!