இனப்படுகொலைக்கு நீதி வழங்குங்கள்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் வைகோ கதறல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 2, 2021, 11:00 AM IST
Highlights

வரலாற்றில், இதற்கு முன்பு  யாரும் காணாத வீரஞ்செறிந்த போராட்டங்களை, விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்தியது.  

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்குங்கள்.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் கதறிய வைகோ. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு நீதி வழங்குங்கள். தமிழ் ஈழம் அமைந்திடப் பொது வாக்குப் பதிவு நடத்துங்கள் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, வைகோ வேண்டுகோள்

விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி சேன்சலர் ஆங்கெலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர், இந்திய அயல் உறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல நாடுகளின் அயல் உறவுத் துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளார். அதன் விவரம் வருமாறு: 

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கி வருகின்ற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் பொதுச்செயலாளராகிய நான், 26 ஆண்டுகளாக, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவும் பொறுப்பு வகித்து வருகின்றேன். தமிழ் ஈழம் அமைவதற்காகக் கடமை  ஆற்றி வருகின்றேன். கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையின் இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைத் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருவதற்கு, அசைக்க முடியாத ஆவணங்கள் சான்றாக இருக்கின்றன. 2009 மே மாதம், மூன்று இலட்சத்து 30 ஆயிரம் மக்களை, முள்ளிவாய்க்கால் என்ற இடத்திற்குள் சுற்றி வளைத்தனர். அந்த வேளையில், செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களை முடக்குவதற்காக, பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து, வெள்ளை வேன்களில் ஆள் கடத்தி, அவர்களைக் காணாமல் போகவும் செய்தனர். தமிழர்கள் மீது சிங்களவர்கள் எப்போதும் வெறுப்பு உணர்வுடனேயே இருந்து வருகின்றனர். 

அப்போதெல்லாம், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமிழர்களைத் தாக்குவதும், தமிழர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துவதும் அவர்களது வாடிக்கை. இத்தகைய கொடுமைகளால், தமிழர்கள், தங்களுக்கெனத் தனிநாடு அமைப்பது என்ற முடிவுக்கு வந்தனர். 1976 மே 14 ஆம் நாள், ஒரு வரலாற்றுத் திருப்பம் நிகழ்ந்தது. தந்தை செல்வா அவர்களுடைய தலைமையில், அனைத்துத் தமிழ் அமைப்புகளும், வட்டுக்கோட்டையில்  ஓரணியாகத் திரண்டு, தன்னாட்சி உரிமைக் கோரிக்கையைத் தீர்மானமாக வடித்தனர். அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெற, பல்வேறு தேசிய இனங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியதை வரலாறு பதிவு செய்து இருக்கின்றது. இது உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வழிமுறை என்பதை, யாரும் மறுக்க முடியாது. அதே வழியில்தான், பிரபாகரன் அவர்களும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்; வரலாற்றில், இதற்கு முன்பு  யாரும் காணாத வீரஞ்செறிந்த போராட்டங்களை, விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்தியது. 

2009 ஆம் ஆண்டு மே மாதம், 1,47,000 தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசு, தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை ஒடுக்கியது.2009 ஆம் ஆண்டு, நோர்வே, பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற, புலம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் இடையே, ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் அமைவதற்கு, அவர்கள் பெரும் ஆதரவு அளித்தனர். 2011 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம், ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில், ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, அரசு அமைப்புச் சட்டத்தின்படி, இலங்கை அரசு தீர்வு காணத் தவறியது. போர் முடிவுற்ற பின்னரும்கூட, மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன;  விடுதலைப்புலிகள் உட்பட, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; அனைத்திற்கும் மேலாக, இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்து, தனித்தமிழ் அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என,  தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் கோருகின்றது. 

ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் மற்றும் ஐ.நா. வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து, கீழ்காணும் கோரிக்கைகளை ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும் என, நாங்கள் கோருகின்றோம். 1. ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும்; ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். 2. 2015 பிப்ரவரி 10 ஆம் நாள், இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை, ஏற்க வேண்டும். 3. இலங்கை அரசு நடத்துகின்ற எந்த விசாரணையின் மீதும், தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை; எனவே, பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். 4. இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சி நிரல் 4 இன்படி, சிறப்பு ஆணையர் (Special Rapporteur) ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.இவ்வாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். 
 

click me!