கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால்... வானதிக்கு அமைச்சர் கொடுத்த சரியான பதிலடி...!

By vinoth kumarFirst Published May 31, 2021, 10:55 AM IST
Highlights

மத்திய அரசிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற்று தரும் பணியை பாஜக தலைவர் எல்.முருகன் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். 

மத்திய அரசிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற்று தரும் பணியை பாஜக தலைவர் எல்.முருகன் செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்;-  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து கூறிவருகிறார். ஏற்கனவே அது தொடர்பாக பல முறை பதிலளித்துள்ளேன். சென்னைக்கு அடுத்தப்படியாக அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது கோவையில் தான். நேற்று வரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கோவை மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து பாரபட்சம் இல்லாமல் பெற்றுத்தர வேண்டும். அதேபோல், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனே திறக்க வானதி சீனிவாசனும், எல்.முருகனும் நல்ல பதிலை பெற்றுத்தாருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தருவது பாஜகவின் கடமை. மொத்தம் 96 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. 

முழு ஊரடங்கு கசப்பான மருந்தாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிட கூடாது என்பதற்காகவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மிக விரைவில் தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகம் முழுவதும் நடமாடும் கடைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

click me!