
1930ம்ஆண்டு ஜூன் 3ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிற்சங்கங்களின் முன்னோடியாக இருந்தார்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப் படுத்தியபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அப்போது உருவான ஜனதா கட்சியில் முக்கிய பங்கு வகித்த அவர் பின்னர் சமதா கட்சியைத் தொடங்கினார்.
இவர் 1998 முதல் 2004 வரை வாஜ்பாயி அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது தான் கார்கில் போர் நடைபெற்றது. மேலும் தகவல்தொடர்ப்பு, தொழில்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சராகவும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இருந்துள்ளார். 2010ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தார், முக்கியமாக கருணாநிதிக்கு நல்ல நண்பர். அதே போல் விடுதலைப் புலிகள் ஆதரவாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமைச்சராக இருந்தபோது கோகோ கோலா நிறுவனத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலை டெல்லியில் மரணமடைந்தார்.