தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் 2வது நாளாக இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நடத்துங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றதத்தில் பரபரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் தாக்கல் செய்த மனுவை தனிநீதிபதி தள்ளுபடி செய்தார். தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் 2வது நாளாக இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்;- கட்சியின் திருத்த விதிகளுக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும் என கட்சியின் சட்ட திட்ட விதிகளில் குறிப்பிடவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
சட்டமன்றம், மக்களவை தேர்தலில் விதிக்கப்படாத நிபந்தனைகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விதிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 10 மாவட்டச் செயலாளர் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தனி நீதிபதி அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பு விதிகளை கவனிக்க தவறிவிட்டார். தொண்டர்கள் மட்டுமே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்ற அதிமுக விதியை மாற்ற முடியாது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த நிபந்தனைகள் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஏற்கனவே இருக்கின்ற விதிகளா அல்லது புதிதாக உருவாக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் எடப்பாடி பழனிசாமியின் சுயநலத்திற்காக இந்த புதிய விதிகள் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ்க்கு ஆதரவு இல்லை என்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள். அப்போது, தான் கட்சியின் யாருக்கு ஆதரவு இருக்கிறது என்பது தெரியவரும் என்று வாதிட்டார். இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த ஓபிஎஸ் வாதம் நிறைவடைந்த நிலையில் விசாரணையை ஏப்ரல் 24ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.