அட… அந்த ஒத்த ஓட்டும் பாஜகவோடது இல்லையாம்…. காயத்ரி ரகுராம் பதில்

By manimegalai aFirst Published Oct 12, 2021, 7:16 PM IST
Highlights

கோவையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு பெறவில்லை என்றும் அவர் சுயேட்சை வேட்பாளர் என்றும் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கூறி உள்ளார்.

சென்னை: கோவையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு ஓட்டு பெறவில்லை என்றும் அவர் சுயேட்சை வேட்பாளர் என்றும் பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் கூறி உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பெரும்பான்மையான இடங்களை திமுக வாரி சுருட்டி இருக்கிறது. அதிமுகவோ அதல பாதாளத்தில் விழுந்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் இப்படி இருக்க… காலை முதலே டுவிட்டரில் ஒத்த ஓட்டு பாஜக என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

அதாவது கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்ட கார்த்திக் என்ற பாஜக வேட்பாளர் வெறும் ஒரு ஓட்டு தான் வாங்கினார் என்று செய்தி பிரபலமானது. அவரது குடும்பத்தினரும் சரி, கட்சியினரும் சரி… ஓட்டே போடவில்லை என்று மீம்ஸ்கள் பறந்து எழுந்தன.

என்னது..? பாஜக ஒரு ஓட்டு தான் வாங்கியதா என்று கேள்விகளும், ஆச்சரியங்களும் சுழன்றன. பாஜகவின் இந்த ஓட்டை கண்ட திமுகவினர் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

இந் நிலையில் பிரபல அரசியல் ஆலோசகரான சுமந்த் தமது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு ஓட்டு வாங்கியவர் பாஜக வேட்பாளர் அல்ல, வேட்பு மனுவில் சுயேட்சை என்று குறிப்பிட்டுள்ளார், அவரது சின்னம் கார் சின்னம் என்ற விவரத்தை சுட்டுகாட்டி உள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவை தமது பக்கத்தில் ஷேர் செய்துள்ள காயத்ரி ரகுராம் அதோடு ஒரு ஆதாரத்தையும் இணைத்து வெளியிட்டு உள்ளார்.

click me!