Annamalai : அவன் ஒரு தலைவரு.. அந்த தைரியத்தில் பேசுறான்.. அண்ணாமலையை ஒருமையில் திட்டித் தீர்த்த அமைச்சர்!

By Asianet TamilFirst Published Dec 15, 2021, 9:36 PM IST
Highlights

"அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கான். ஒரு படித்தவன் என்ன பேசணுமோ அதைப் பேசணும். ஒரு தகுதி இல்லாத வார்த்தையைக்கூட பேசக் கூடாது."

அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கான். மத்தியில் அரசு இருக்கு என்று பேசுறான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணமலையை கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி ஒருமையில் பேசி விமர்சனம் செய்துள்ளார். 

தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி ஓசூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 106 இலங்கை தமிழர்கள் முகாமில், வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மட்டும் சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தொகையான ரூ. 2,700 கோடியை தள்ளுபடி செய்துள்ளார். தமிழகத்தில் இதுவரை யாரும் செய்யாததை எல்லாம் முன்மாதிரியாக முதல்வர் செய்து வருகிறார்.” என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.

அப்போது அவரிடம் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்பான இடங்களில் நடக்கும் ரெய்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் காந்தி, “பழிவாங்கும் நோக்குடன் நாங்கள் ஏன் செய்ய போகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியாததா?. அவர் செய்ததற்கு இதெல்லாம் ரொம்ப கம்மி” என்று தெரிவித்தார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக குற்றம் சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் காந்தி, “அவன் ஒரு தலைவரு, அவனை பற்றி பேசுற நீ. அவனை ஒரு தலைவருன்னு நீயும் ஏத்துகிறியே. அவன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிக்கிட்டு இருக்கான். ஒரு படித்தவன் என்ன பேசணுமோ அதைப் பேசணும். ஒரு தகுதி இல்லாத வார்த்தையைக்கூட பேசக் கூடாது. பவர் என்பது நிரந்தரமாக இருக்காது. அவன் எந்தத் தைரியத்தில் பேசுகிறான். மத்தியில் அரசு இருக்கு என்று பேசுறான். அதை நம்பி அந்த மாதிரி பேசக் கூடாது.” என்று காந்தி ஒருமையில் பதிலளித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!