முதல்வரை ஓவர்டேக் பண்ணிய கவர்னர்... எட்டு திக்கும் குட்டு வாங்கும் அ.தி.மு.க. அரசு!

By vinoth kumarFirst Published Nov 22, 2018, 1:30 PM IST
Highlights

நாகை மாவட்டத்துக்கு வந்திறங்கினார் கவர்னர் பன்வாரிலால். பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி வண்டியை விடச்சொன்னார். காலை முதல் தன் சுற்றுப்பயணத்தை துவக்கியவர், சுமார் எட்டு இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். வேதாரண்யம், பழங்கள்ளிமேடு உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து பெரும் ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.

கஜா வந்தாலும் வந்தது செம்ம அடி வாங்கிக் கொண்டிருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு. புயல் கரைகடந்த முதல் நாளில் ‘சூப்பரப்பு’ என்று  அரசின் முன்னேற்பாடுகளை தட்டிக் கொடுத்த எதிர்கட்சிகள், அதன் பின் வெச்சு செய்து கொண்டிருக்கின்றன இன்று வரை. தங்களை நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு வெறும் சீன் மட்டும் போடுவதாக அமைச்சர்களை பார்க்கும் இடங்களிலெல்லாம் தெறிக்க வைக்கின்றனர் மக்கள். இது போதாதென்று புயல் நிவாரண தொகையை அள்ளி வழங்கியது தாங்களே! என்று பெயர் தட்டிக் கொள்ள கவர்னர் வழியே மத்திய அரசு செய்திருக்கும் மூவ்! வேறு எடப்பாடி டீமை கடுப்பேற வைத்திருக்கிறது. 

இவை எல்லாவற்றிலும் கவர்னர் வைத்த செக்தான் முதல்வர் பழனிச்சாமியை பர்ஷனலாக வெறுப்பேற்றிவிட்டது என்று அ.தி.மு.க.வின் தலைமை கழக அலுவலகத்திலேயே கதைப்புகளை கேட்க முடிகிறது. அப்படி என்ன செய்துவிட்டார் கவர்னர்?... புயல் கரை கடந்து சில மணிநேரங்கள் கழித்த பின் தான் நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளிட்ட சில பகுதிகள் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட விஷயம் வெளியுலகுக்கு தெரிந்தது. உடனேயே படை பல பராக்கிரமத்துடன் களமிறங்கியிருக்கலாம் முதல்வர். 

ஆனால் அதை அவர் செய்யவில்லை! எப்படி கன்னியாகுமரியில் இதே போன்ற விவகாரத்தில் நேரடியாக அங்கு செல்வதை தவிர்த்தாரோ அதேபோல் இங்கும் தவிர்த்தார். பின் சில தினங்கள் கழித்தே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றார். அதுவும் ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்தார். அடுத்து காரில் சென்று சில இடங்களை பார்க்கலாம் என்று நினைத்தால், மக்களின் ஆதங்கம் அதிகமாக இருந்த தகவல் வந்த காரணத்தினால் ப்ரோக்ராமில் பாதியை ரத்து செய்துவிட்டு திரும்பினார். 

‘ஹெலிகாப்டர்ல பறக்குற முதல்வரால இறங்கி வந்து எங்க நிலமையை தெரிஞ்சுக்க மனசில்லையோ?’ என்று ஆவேசப்பட்டனர் மக்கள். ஏற்கனவே கஜா புயலால் அநியாயத்துக்கு அ.தி.மு.க. அமைச்சரவையின் பெயர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வரின் செயல்பாடுகளோ அந்த அதிருப்தியை இன்னும் அதிகப்படுத்தின. சுனாமியாய் சுழன்றடித்த விமர்சனங்களுக்கு இடையில் சென்னை திரும்பிய முதல்வர், அனைத்து துறை செயலர்களும் அவரவர் துறைகளில் ஏற்பட்டிருக்கும் சேதாரம் குறித்து வழங்கிய அறிக்கையின் படி மொத்தம் சுமார் பதினைந்தாயிரம் கோடி நிவாரண நிதியுதவி கேட்டு பிரதமரை சந்திக்க டெல்லி கிளம்பினார் நேற்று. 

ஆனால் அதேவேளையில் நாகை மாவட்டத்துக்கு வந்திறங்கினார் கவர்னர் பன்வாரிலால். பாதிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி வண்டியை விடச்சொன்னார். காலை முதல் தன் சுற்றுப்பயணத்தை துவக்கியவர், சுமார் எட்டு இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். வேதாரண்யம், பழங்கள்ளிமேடு உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்து பெரும் ஆறுதல் வார்த்தைகளை கூறினார். முதல்வர் மற்றும் துணை முதல்வரால் ’ரிஸ்க்’ என்று சொல்லி பார்வையிடுவதில் தவிர்க்கப்பட்ட இடங்களுக்கு ஜம்மென்று போய் கவர்னர் இறங்கியதும், மக்களிடம் பேசியதும் ஆளும் கூடாரத்தின் ஆணி வேரை ஆட வைத்தது. 

கவர்னர் சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் ‘யாரும் எங்களை வந்து பார்க்கல, எதுவும் கிடக்கலை’ என்று அரசை செமத்தியாகப் போட்டுக் கொடுத்தனர். அத்தனையையும் தலையசைத்துக் கேட்டுக் கொண்ட கவர்னர், சில இடங்களில் மொழிபெயர்ப்பாளர் வாயிலாக மக்களின் பிர்ச்னைகளை புரிந்து கொண்டார். இதுவரையில் கவர்னர் எங்கு சென்றாலும் கறுப்புக் கொடி காட்டி, ‘மாநில சுயாட்சி அதிகாரத்தை நசுக்கும் புரோஹித்தே! திரும்பிச் செல்லுங்கள்.’ என்று தெறிக்க விட்ட தி.மு.க. கூட கவர்னரின் இந்த செயலுக்கு லைக்ஸ் போட்டது. பிற எதிர்கட்சிகளும் அவருக்கு சூப்பர்ப்! என்று சொல்லி எடப்பாடி அண்ட்கோவை கடுப்பேற்றினர். 

கவர்னரின் ஒவ்வொரு மூவ்-வுமே அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உளவுத்துறை போலீஸ் மூலம் முதல்வரின் காதுகளுக்கு அப்டேட் செய்யப்பட்டு வந்தன அவ்வப்போது. இதில் எல்லாவற்றையும் விட முதல்வரை மிகவும் முகம் சிவக்க வைத்த விஷயம், “இன்னும் இரண்டு நாட்களில் உங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.”  என்று கவர்னர் கூறி கதையை முடித்ததுதான்.  

நிவாரண நிதி வேண்டி பிரதமரை சந்தித்து, அதைப் பெற்று, பாதிக்கப்பட்ட மக்களிடம் அதைக் காட்டி மீண்டும் தங்கள் சேதாரத்தை சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தார் எடப்பாடியார். ஆனால், கவர்னரோ பிரதமரை முதல்வர் சந்திப்பதற்குள் ஜஸ்ட் லைக் தட் ஆக ரெண்டு நாட்களில் பிரச்னை தீரும் என்று, ’மத்திய அரசு உங்களுக்கு நிவாரண நிதி கொடுக்கும் மக்களே. கலங்காதிருங்கள். மாநில அரசு உங்களை கண்டுகொள்ளவில்லை என்றாலும் கூட நாங்கள் இருக்கிறோம். மோடி காப்பாற்றுவார்!’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டதாகவே அ.தி.மு.க.வின் தலைமை நினைக்கிறது.

கஜா புயலை தேர்தலுக்காக யாரும் பயன்படுத்த வேண்டாம்! என்று தமிழக எதிர்க்கட்சிகளை பார்த்து தம்பிதுரை நாக்கை துரத்திய நிலையில்,  மத்திய அரசே இந்த விஷயத்தில் பக்கா பாலிடிக்ஸை நடத்தி முடித்துவிட்டது, முதல்வர் பிரதமரை சந்திக்கும் முன்பாக கவர்னர் வழியே ‘உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்’ என்று அமித்ஷா செம்ம லாபி செய்துவிட்டார்! என்றே கலங்குகிறார்கள்.

click me!