மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் சிறைக்கு செல்வது உறுதி என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொய் வாக்குறுதி கொடுத்த பாஜக
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என வாக்குறுதி அளித்தது அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கி தருவேன் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
சிறையில் மோடி, அமித்ஷா
ஊழலை ஒழிப்பேன் என கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தற்போது உலக மகா ஊழல் கட்சியாக பாரதிய ஜனதா இருந்து வருவதாகவும் விமர்சித்தார். தேர்தல் பத்திர ஊழல் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தோல்வி பயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை மத்திய அரசு கைது செய்து வருவதாகவும் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் சிறைக்கு செல்வது உறுதி என்றும் தெரிவித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 4 ஆண்டுகாலமாக ஆட்சி நடத்துவதற்காக அதிமுக பாஜகவிற்கு அடிமையாக செயல்பட்டதாகவும் விமர்சித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் காலை ஒரு கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் மாலை ஒரு கட்சியுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
அதிக திருடர்களை அண்ணாமலை பிடித்துள்ளார்
அடுத்து ஒரு கட்சியுடன் ஒப்பந்தம் போடுகின்றார்கள் என்றால் இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத பாட்டாளி மக்கள் கட்சியை மக்கள் முறியடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறையில் இருந்தபோது பிடித்த திருடர்களை விட தமிழக பாஜக தலைவரான பிறகு தான் அதிக அளவிலான திருடர்களைப் பிடித்து பாஜகவில் இணைத்துள்ளதாகவும் இப்படிப்பட்ட கூட்டணியில் தான் பாமக இணைந்துள்ளது என்றும் கடுமையாக விமர்சித்தார்.