பாபு ராஜேந்திரபிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை - ஜனாதிபதி தேர்தல் சில சுவாரஸ்ய தகவல்கள்...

First Published Jun 19, 2017, 6:47 PM IST
Highlights
From Prasad to Pranab all the President polls some sweeps some contests much intrigue


இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது நடைபெற்ற சில சுவாரஸ்யமான பின்னணி தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளன.

நாட்டின், 15-வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை, 17 ம் தேதி நடக்க உள்ளது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தற்போதைய பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு

இதற்கு முன் முன் நடந்த, 14 ஜனாதிபதி தேர்தல்களில், ஒரு முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு நடந்துள்ளது. அது, ஏழாவது ஜனாதிபதி தேர்தல்; போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர் நீலம் சஞ்சீவ ரெட்டி.

ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமது மறைவினால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய திடீர் தேர்தல் நடந்தது. இதில், நீலம் சஞ்சீவ ரெட்டி உட்பட, 37 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

அதில், மற்ற 36 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், 1977 ம் ஆண்டு ஜூலை, 21-ம் தேதி நீலம் சஞ்சீவ ரெட்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடும் போட்டியில் வி.வி.கிரி வெற்றி

பிற ஜனாதிபதி தேர்தல்கள் அனைத்திலும் போட்டி இருந்தது. அதில், 1969ம் ஆண்டு ஆக., 6ம் தேதி நடந்த ஐந்தாவது ஜனாதிபதி தேர்தல் தான் கடும் போட்டியை சந்தித்தது. இதில், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது காங்கிரசில் பிளவு ஏற்பட்டு இருந்தது.

அப்போதைய பிரதமர் இந்திரா தலைமையிலான காங்., வி.வி.கிரியை ஆதரித்தது. அவருக்கு தேர்தலில், 4,01,515 ஓட்டுக்கள் கிடைத்தன. கிரியை எதிர்த்து போட்டியிட்ட ரெட்டியை ஆதரித்த அணி, 'சிண்டிகேட்' என, அழைக்கப்பட்டது. இத்தேர்தலில் ரெட்டி 3,13,548 ஓட்டுக்கள் கிடைத்தன. 87,967 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கிரி வெற்றி பெற்றார்.

ஜாகிர் உசேன்

இதேபோல், நான்காவது ஜனாதிபதி தேர்தலிலும் கடும் போட்டி காணப்பட்டது. இதில் ஜாகிர் உசேன், கோட்டா சுப்பாராவ் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில், ஜாகிருக்கு, 4.71 லட்சம் ஓட்டுக்கள்; சுப்பாராவுக்கு, 3.64 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்தன. மிக அதிகபட்சமாக இந்த தேர்தலில் தான், 17 பேர் போட்டியிட்டனர். அவர்களில் பல வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.

முதல், 2-வது தேர்தல்

முதல் ஜனாதிபதி தேர்தல், 1952ம் ஆண்டு மே, 2ம் தேதி நடந்தது. இதில் ராஜேந்திர பிரசாத் உட்பட, ஐந்து பேர் போட்டியிட்டனர். இதில், ராஜேந்திர பிரசாத்துக்கு, 5.60 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட கே.டி.ஷா என்பவருக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான ஓட்டுக்கள் கிடைத்தன.

இரண்டாவது ஜனாதிபதி தேர்தல், 1957 ஜூலை, 6ம் தேதி நடந்தது. இதில், மூன்று போட்டியிட்டனர். ராஜேந்திர பிரசாத், 4.60 லட்சம் ஓட்டுக்கள் பெற்று மீண்டும் ஜனாதிபதியானார்.

‘தேர்தல் மன்னன்’

இந்த தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய தேர்தல் மன்னன் என்று அழைக்கப்பட்ட சவுத்ரி ஹரி ராமுக்கு, 2,672 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்தன.

இந்த ஹரி ராம், முதல் நான்கு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டார். 1967ம் ஆண்டு மே, 6ம் தேதி நடந்த தேர்தலில் அவருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. அதன் பிறகே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அவர் கைவிட்டார்.

புதிய சட்டம்

இப்படி தேவையில்லாத நபர்கள் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடுவதை தவிர்க்க, 1974ம் ஆண்டு, ' ஒவ்வொரு வேட்பாளரையும், 10 மக்கள் பிரதிநிதிகள் முன்மொழிய வேண்டும்; 10 பேர் வழிமொழிய வேண்டும்' என, சட்டம் கொண்டு வரப்பட்டது.

இது, 1997 ம் ஆண்டில் மீண்டும் திருத்தப்பட்டது. அதன்படி, 10 பேர் முன்மொழிய வேண்டும்; 50 பேர் வழிமொழிய வேண்டும் என கொண்டு வரப்பட்டது. டிபாசிட் தொகையும், 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

நேரடிப்போட்டியில் கலாம்

கடந்த, 1997 ம் ஆண்டுக்கு பிறகு நடந்த, நான்கு ஜனாதிபதி தேர்தல்களிலும், நேரடி போட்டி தான் காணப்பட்டது. 1997 ஜூலை, 14ல் நடந்த, 11வது ஜனாதிபதி தேர்தலில் கே.ஆர்.நாராயணன் வெற்றி பெற்றார்; டி.என்.சேஷன் தோல்வி அடைந்தார்.

2002ம் ஆண்டு ஜூலை, 15ம் தேதி நடந்த, 12வது ஜனாதிபதி தேர்தலில், அப்துல் கலாம் வெற்றி பெற்றார்; லட்சுமி செகால் தோல்வி அடைந்தார்.

பிரணாப் முகர்ஜி

2007 ம் ஆண்டு ஜூலை, 19ம் தேதி நடந்த, 13வது தேர்தலில் பிரதீபா பாட்டீல் வெற்றி பெற்றார்; பைரோன் சிங் ெஷகாவத் தோல்வி அடைந்தார்.

2012ம் ஆண்டு ஜூலை, 19ம் தேதி நடந்த, 14வது ஜனாதிபதி தேர்தலில், பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார்; பி.ஏ.சங்மா தோல்வி அடைந்தார்.

click me!