
‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ இனி, ‘அதிமுக ஜெ.தீபா அணி’ என்றே அழைக்கப்படும் என ஜெயலலிதா அண்ணன் மகளும் அதிமுக ஜெ.தீபா அணி பொதுச் செயலாளர் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, “என்னுடைய ‘எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை’ தற்போதிலிருந்து, ‘அதிமுக ஜெ.தீபா அணி’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என் மீது சிலர் திட்டமிட்ட அவதூறைப் பரப்பி வருகின்றனர்.
என்னுடைய ஆதரவாளர்களின் பலத்தை பார்த்து பன்னீர்செல்வம், நாங்கள் இருவரும் சந்திக்கும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார். மரியாதை நிமித்தமாகவே இருவரும் சந்தித்துள்ளோம். அதன்பிறகு எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
தற்போது அதிமுக தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது. அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றி அதிமுக-வை நான் வழிநடத்த வேண்டுமென்பதே என்னுடைய நோக்கம். அதைத்தான் தொண்டர்களும் விரும்புகின்றனர்.
அதிமுக சின்னம், கட்சியின் கொடி என கட்சியின் அனைத்தையும் கைப்பற்ற பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு எங்களுக்கு 20ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் வழங்கியுள்ளது.
வெறும் எம்.எல்.ஏ-க்களை மட்டும் வைத்துக்கொண்டு கட்சியை வழிநடத்த முடியாது. கட்சிக்குத் தொண்டர்களின் பலம் அவசியம். எங்களிடம் தொண்டர்கள் பலம் உள்ளது”இவ்வாறு தெரிவித்தார்.