
கோவையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த்து. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ பேசியதாவது.
தற்போது திராவிட கட்சிகளுக்கு பெரும் சோதனை காலமாக இப்போது இருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பலர் முயல்கிறார்கள். தமிழகம் மற்றும் தமிழர்களின் நலனையே கருத்தில் கொண்டு ஊழலற்ற அரசியலை மதிமுக நடத்தி வருகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு செயல்படுகிறது. இதற்காக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வரலாறு காணாத அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளது. இதற்கு காரணம் திமுகவினர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக கோருவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் 3 முறை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குரல் வாக்கெடுப்பாக தான் நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனித்து இருக்கிறார். இதை வைத்து கொண்டு, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என திமுக சதித் திட்டம் தீட்டுகிறது.
நதி நீர் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து கொண்டே வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. எனவே தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நுழைய விடமாட்டோம்.
உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிடுகிறது. இதற்காக நான், தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் சென்று, மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.