நேற்று ப்ரைடு ரைஸ்... இன்னைக்கு பணியாரம்... திமுக பெண் வேட்பாளரின் அடேங்கப்பா யுக்தி..!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2021, 1:01 PM IST
Highlights

திருப்புவனம், அகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கே நாற்று நட்ட பெண்களை கண்டதும் அவர்களிடம் சென்று வாக்கு சேகரித்தார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழரசி பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., நாகராஜன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, அமமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியை பொறுத்தவரையில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இந்த சூழலில் இத்தொகுதியைக் கைப்பற்ற திமுக, அமமுக போராடி வருகிறது. இதனால் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். முதலாவதாக அ.ம.மு.க வேட்பாளர் மாரியப்பன் கென்னடி மோட்டார் சைக்கிளில் சென்று மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்து அசத்தினார். 

இதனை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் நாகராஜன், திருப்புவனம் தினசரி சந்தைக்கு சென்று அங்கு காய்கறி வியாபாரியாக மாறி வாக்குச் சேகரித்தார். திமுக வேட்பாளரரும் முன்னாள் அமைச்சருமான தமிழரசி தினம் தினம் புதுப்புது பிரச்சார யுக்தியை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளார். மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தபோது அங்குள்ள உணவகத்தில் பரோட்டா, ப்ரைடு ரைஸ் தயாரித்தார். அதை அவ்வழியாகச் சென்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்து சென்றனர். திருப்புவனம், அகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கே நாற்று நட்ட பெண்களை கண்டதும் அவர்களிடம் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது சேலையை வரிந்து கட்டிக் கொண்டு வயலில் இறங்கி நாற்று நட்டபடியே வாக்கு சேகரித்தார். அதனை அடுத்த கிராமத்திற்கு சென்ற தமிழரசி அங்கு பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த முதியவரை எழுப்பி விட்டு பணியாரம் செய்து கொடுத்து வாக்கு சேகரித்தார். இன்னும் இப்படி என்ன யுக்தியை தமிழரசி கையாளப்போகிறாரோ என உடன் வாக்கு சேகரித்து வரும் நிர்வாகிகள் இன்ப அதிர்ச்சியோடு காத்திருக்கிறார்கள். 2011ம் ஆண்டு இதே தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய தமிழரசி அதிமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். இம்முறை அங்கு எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் இப்படி வித்தியாசமான யுக்திகளை கையிலெடுத்துள்ளார்.

click me!