
இந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் களத்தின் புதிய டிரெண்ட் செட்டராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பிற்கு முன்பிருந்தே உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு உதயநிதியின் பிரச்சார வேகம் திகுதிகு என உயர்ந்துள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு எத்தனை இடங்களில் பேசுகிறோம் என்கிற கணக்கே இல்லாமல் தாறுமாறாக பேசி வருகிறார். ஒரே வேட்பாளரை ஆதரித்து இரண்டு மூன்று இடங்களில் எல்லாம் உதயநிதி பேசுவதுதான் ஹைலைட். உதயநிதி பிரச்சாரத்தை டிவியில் பார்த்த திமுகவினர் அவரை நேரில் பார்க்க அழையா விருந்தாளியாக திரள்வது பிரச்சார ஏற்பாட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
அதிலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான உதயநிதியின் விமர்சனம் திமுக தொண்டர்களை ஆர்ப்பரிக்க வைக்கிறது. மதுரையில் பிரதமர் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு கொண்டு வந்திருப்பதாக கூறி ஒரு செங்கலை எடுத்து உதயநிதி காட்டும் போது அந்த இடமே ஆர்ப்பரிக்கிறது. அத்தோடு சமூக வலைதளங்களிலும் உதயநிதியின் இந்த பிரச்சாரம் செம்மையாக கைகொடுக்கிறது. திமுகவில் ஏராளமான நட்சத்திர பேச்சாளர்கள் இருந்தாலும் தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றவாறு உதயநிதி பேசுவது திமுக தொண்டர்களை கவர்ந்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி போன்றோர் கடந்த கால நடைமுறைகளை பின்பற்றி எதுகை மோனையில் பேசிக் கொண்டிருக்க, உதயநிதி ஸ்டாலினோ கேஷ்வல் பேச்சு நடையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். பொதுமக்களை கடுமையாக பாதித்த மற்றும் பொதுமக்கள் மிகவும் நன்றாக அறிந்த விஷயங்களை உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின் போது புட்டு புட்டு வைப்பது அங்கு உள்ளவர்களை அந்த இடத்தை விட்டு நகரவிடாமல் பார்த்துக் கொள்கிறது. அத்தோடு பிரச்சாரத்தின் போது பொதுமக்களோடு உதயநிதி உரையாடுவதும் நல்ல பலனை கொடுக்கிறது.
பேச்சுக்கு நடுநடுவே வாக்காளர்களை நோக்கி உதயநிதி கேள்வி எழுப்ப அதற்கு அவர்கள் கொடுக்கும் பஞ்ச் பதில்களும் அந்த இடத்தை கலகலப்பாக்குகிறது. அத்தோடு வாக்காளர்கள் அளிக்கும் பதில்களுக்கும் தனக்கே உரிய பாணியில் உதயநிதி கொடுக்கும் பதிலடியும் அந்த இடத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அதே சமயம் சில சமயங்களில் உதயநிதி வரம்பு மீறி பேசுவதாகவும் திமுகவினர் முனுமுனுப்பதை பார்க்க முடிகிறது. அதிலும் பிரதமர் மோடி குறித்த உதயநிதியின் விமர்சனம் தேவையற்றது என்று திமுகவினரே கூறிச் செல்கின்றனர். சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மாநில விஷயங்களை பேசாமல் மத்திய அரசை சீண்டிக் கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம் என்றும் அவர்கள் லாஜிக்காக கேட்கின்றனர்.
மோடியை திட்டினால் தமிழன் ரசிக்கிறான் என்று கூறி அதனை உதயநிதி தொடர்ந்து செய்வது சாமான்ய வாக்காளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். தமிழக சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை என்ன பிரச்சனையோ அதனை மையப்படுத்தி உதயநிதி பேசினால் இன்னும் அவரது பேச்சு எடுபடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.