அச்சுறுத்தும் புதிய வகை வைரஸ்...? இலவச தடுப்பூசி வழங்க வேண்டும்...! ஓபிஎஸ் கோரிக்கை

By Ajmal KhanFirst Published Apr 13, 2022, 12:30 PM IST
Highlights

கொரோனா வரைஸ்  அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசியை இலவசமாக தமிழக மக்களுக்கு செலுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசிக்கு வரவேற்பு

உருமாறியுள்ள கொரோனா பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு இலவசமாக 3 வது தவணை தடுப்பூசி செலுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்' என்ற கவிமணியின் கூற்றும், 'சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத இயலும்' என்னும் பழமொழியும் அரிதாய்ப் பெற்ற மனிதப் பிறவி போற்றிப் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதை உணர்த்துகிறது. இதற்கேற்ப உடலை உறுதியாக்கி நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற வேண்டிய பொறுப்பு எப்படி ஒவ்வொருவருக்கும் இருக்கிறதோ, அதே போன்று பொது சுகாதாரச் சவால்களை எதிர்கொண்டு மருத்துவச் சேவை வழங்குகின்ற கடமையும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு.கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக அனைவருக்கும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தும் முறையை மாநில அரசுகள் மூலமாக மத்திய அரசு இலவசமாக நடைமுறைப்படுத்தி, அந்தப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். இந்திய மக்களுக்கான இந்த இலவசத் தடுப்பூசித் திட்டம் அனைவர் மத்தியிலும், குறிப்பாசு ஏழை, எளிய மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

உருமாறிய வைரஸ் கண்டுபிடிப்பு

இந்த நிலையில், கொரோனா தொற்று நோய் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என உருமாறி வருவதன் காரணமாக, இருமுறை தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒன்பது மாதம் கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் அறுபது வயதை கடந்தவர்களுக்கு, கூடுதல் பாதுகாப்பாக, மூன்றாவது முறையாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செலுத்தப்பட்டு வருகிறது.தற்போது இந்த கொரோனா தொற்று நோய் மீண்டும் உருமாறியுள்ளது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த அலை குறிந்து மருத்துவ வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர். மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூட இது குறித்து பேசி இருக்கிறார்.இந்தச் சூழ்நிலையில், மக்களுக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பினை தரும் பொருட்டு இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஒன்பது மாதங்கள் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்திக் கொள்வதற்கான வசதி தனியார் தடுப்பூசி மையங்களில் இந்த மாதம் 10-ஆம் தேதி முதல் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசிக்கான கட்டணம் சேவைக் கட்டணம் உட்பட 375 ரூபாய் அளவுக்கு இருக்கும் என்றும், இது தொடர்பான நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

இலவசமாக தடுப்பூசி செலுத்திடுக..

கொரோனா தொற்று ஓரளவு குறைந்து பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை தற்போது தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கட்டணம் மக்களுக்கு ஒரு கூடுதல் சுமை. மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியினையும் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக செலுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது. அரசு மேலும், இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 186 கோடி தடுப்பூசிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 10.39 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு இந்தத் திட்டம் வெற்றியடைந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தத் தடுப்பூசித் திட்டம் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுதான்.எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை இலவசமாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செலுத்துவதற்குரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இல்லையெனில் மாநில அரசின் நிதியிலிருந்து முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

click me!