சென்னையை கலக்கும் மோசடி செயலி.. கும்பல் கும்பலாக ஏமாறும் இளைஞர்கள்.. திணறும் போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2021, 11:21 AM IST
Highlights

தினேஷ் அளித்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார் Share Me செயலி குறித்தும், அதன் இயக்கம் குறித்தும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சென்னையில் Share me செயலி மூலம் பணம் திருட்டு வழக்கில் 3 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், தப்பிய குற்றவாளிகளுள் ஒருவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேட்டில் வசித்து வருபவர் தினேஷ்(28).  இவர் கடந்த சில மாதங்களாக வேலை தேடிவந்துள்ளார். பின் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்க, கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தனியார் நிறுவனத்தில் தினேஷ் பணிபுரிந்துள்ளார். அப்போது தினேஷ் தனது நண்பன் சுந்தர் என்பவரின் வழிகாட்டுதலின்படி Share Me என்ற செயலியை தனது செல்போனில் App Link மூலம் பதிவிறக்கம் செய்துள்ளார். 

அதில் 30 ஆயிரம் ரூபாய் கட்டி  அந்த செயலியில் வரும்  வீடியோக்களை லைக் செய்து அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து Share Me என்ற செயலியில் பதிவேற்றம் செய்தால் ஒரு ஸ்கிரின் ஷாட்டிற்கு 18 ரூபாய் வீதம் நாள் ஒன்றுக்கு 1,800 ரூபாயும், மாதத்திற்கு 54 ஆயிரம் ரூபாயும் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தையை  நம்பி தனது நண்பன் லோகேஷ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளதை அறிந்த தினேஷ் தானும் அதேபோல் பணம் செலுத்த முற்பட்டுள்ளார். பின்பு தன்னிடம் போதிய பணம் இல்லாததால் ரூபாய் 3 ஆயிரத்தை மட்டும் கடந்த மாதம் 30 ஆம் தேதி செயலியில் வழங்கப்பட்டிருந்த வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்குப் பிறகு அந்நிறுவனம் அந்த செயலியை நிறுத்தி விட்டதால் தான் ஏமாற்றப்பட்டதையும், தன்னைப்போலவே பல நபர்கள் இதே மோசடியால் ஏமாற்றப்பட்டு இருப்பதையும் அறிந்த தினேஷ் தன்னை ஏமாற்றிய செயலியைச் சார்ந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மாதவரம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார். தினேஷ் அளித்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்த மாதவரம் போலீசார் Share Me செயலி குறித்தும், அதன் இயக்கம் குறித்தும் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் Share Me செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்டது சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சையது பக்ரூதீன் (36), மீரான் மொய்தீன்(49), முகமது மானஸ்(21) மற்றும் அன்சாரி (48) ஆகிய 4 பேர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சையது பக்ருதீன், மீரான் மொய்தீன் மற்றும் முகமது மானஸ் ஆகிய 3 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளியான அன்சாரி என்பவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இது மட்டுமல்  இதுபோல விதவிதமான செயலிகளில் இளைஞர்கள் பணத்தை இழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக இளைஞர்களை செயலி மோகத்தில் இருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடதக்கது. 

 

click me!