ஏடிஜிபி ரமேஷ் குடவாலா மீது மோசடி வழக்கு... முதல்வர் பழனிசாமியை சந்தித்த நடிகர் சூரி..!

By Thiraviaraj RMFirst Published Oct 13, 2020, 11:20 AM IST
Highlights

ஒரு கட்டத்திற்கு மேல் சூரியின் வற்புறுத்தல் அதிகமாகவே, 2018ஆம் ஆண்டில் விஷ்ணு விஷாலின் வங்கிக் கணக்கில் இருந்து சூரிக்கு 40 லட்ச ரூபாய் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 

ஏடிஜிபி ரமேஷ் குடவாலா மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் நடிகர் சூரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். 

குறுகிய காலத்தில் நகைச்சுவை நாயகனாக தடம் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த சூரி, 2015ஆம் ஆண்டில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தமானார். அப்போது இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா. இந்த படத்திற்காக சூரிக்கு 40 லட்ச ரூபாய் சம்பளம் அப்போது பேசப்பட்டது. படத்தின் மற்றொரு தயாரிப்பாளராக அன்புவேல் ராஜனும் இருந்துள்ளார்.

 

விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா காவல்துறையில் ஏடிஜிபியாக இருந்தார். சூரிக்கு அந்த சமயத்தில் தனிப்பட்ட பிரச்சினை ஒன்று வரவே, அதை சுமூகமாக தீர்த்து வைத்திருக்கிறார் ரமேஷ் குடவாலா. இதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பும் நம்பிக்கையும் இருந்துள்ளது. இதனிடையே, நிலத்தில் முதலீடு செய்ய தனக்கு விருப்பம் இருப்பதை விஷ்ணுவிடம் எதேச்சையாக சூரி கூறவே, அதை தன் தந்தை ரமேஷ் குடவாலாவிடம் கூறியிருக்கிறார் அவர். அப்போது சிறுசேரியில் ஒரு இடம் இருப்பதாக கூறிய ரமேஷ் குடவாலா, படத்தின் சம்பளத் தொகை ஏற்கனவே நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி மீதமுள்ள பணத்தை கொடுத்தால் போதும் என கூறியிருக்கிறார். இதையடுத்து நடிகர் சூரியும் 2 கோடியே 70 லட்ச ரூபாய் பணத்தை தந்துள்ளார். ஆனால் சொத்தை வாங்க ஒப்பந்தம் போட்ட சில நாட்களிலேயே அதில் வில்லங்கம் இருப்பதை அறிந்துள்ளார் சூரி.

 

நிலத்தின் ஆவணங்களை சோதனை செய்த போது, அது ஒன்றரை கோடி மதிப்புள்ள சொத்து தான் என்றும், ஊர் தலைவர்கள் உள்ளிட்டோர் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி அதிக மதிப்பு காட்டி சூரியிடம் ரமேஷ் குடவாலா விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனால் அதிர்ந்து போன சூரி, தன் பணத்தை திரும்ப தருமாறு கூறியிருக்கிறார். 

ஆனால் அவர்கள் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் சூரியின் வற்புறுத்தல் அதிகமாகவே, 2018ஆம் ஆண்டில் விஷ்ணு விஷாலின் வங்கிக் கணக்கில் இருந்து சூரிக்கு 40 லட்ச ரூபாய் பணம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அப்போதே மீதமுள்ள 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்துள்ளனர். 

ஆனால் 2 வருடங்கள் கடந்த போதிலும், பணம் கைக்கு கிடைக்காததால் சூரி, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரில் சம்பந்தப்பட்டவர் முன்னாள் டிஜிபி என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் சில வாரங்களுக்கு முன்பாக புகார் கொடுக்க வந்த சூரியிடம் பஞ்சாயத்து பேசி திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன்பிறகும் பணம் கைக்கு வராததால் பொறுமை இழந்து போன சூரி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்தார். 

அதில் ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் தன்னை ஏமாற்றியதாக கூறி அதற்கான ஆவணங்களை சமர்பித்ததோடு, தன் பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், முன்னாள் டிஜிபியான ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது வழ​க்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவின் பேரில், ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் ஆகிய 2 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி புகார் என்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மோசடி புகாரில் முன்னாள் காவல்துறை அதிகாரி சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம் இந்த வழக்கில் விஷ்ணு விஷாலும் சிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டதை ஒட்டி அவரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அவர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 

click me!