
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அதற்கு முன்பு சுமார் 75 நாட்கள் வரை அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் இறந்த பிறகு பல்வேறு சர்ச்சைகள் பரவியதால், கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியால் ஆறுமுக சாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடைகோரிய அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு சார்பில் இணையதளத்தில் நேற்று பதிவேற்றப்பட்டது.
அதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ மருத்துவக்குழுவை நியமிப்பது சரியாகவும், பொருத்தமாகவும் இருக்கும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான நிபுணர்களை கொண்ட மருத்துவக்குழுவை டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு நியமிக்கப்படும் மருத்துவக்குழுவிடம் ஆணையத்தின் மொத்த விசாரணை ஆவணங்களையும் அளிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் இந்த டாக்டர்கள் பங்கேற்க வேண்டும். விசாரணையில் பங்கேற்று அதற்கான அறிக்கையை ஆணையத்திடமும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடமும், சசிகலாவிடமும் மருத்துவ குழு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.