அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ.. மகிழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி.!

By vinoth kumarFirst Published Jul 17, 2021, 1:09 PM IST
Highlights

ராஜேந்திர பாலாஜியும் ராஜவர்மனும் பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது, விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்தி பாலாஜியுடன் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

அதிமுக முன்னாள் எம்எல்ஏவான சாத்தூர் ராஜவர்மனுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டால் தோல்வி அடைவார் என அதிமுகவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து குரல் கொடுத்ததால் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் ஓரங்கட்டப்பட்டார். 

தனக்கு ராஜேந்திர பாலாஜி கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் பகீரங்கமாக குற்றம் சாட்டினார். அதன் பின்னர் அவர் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு அளித்து நேர்க்காணல் சென்றார். ஆனால், சட்டப்பேரவை தேர்தலில்  போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த அவர் உழைப்புக்கு கட்சியில் மதிப்பில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அமமுகவில் இணைந்த பிறகு, அதிமுகவை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. சசிகலாவுக்கு அதிமுக தலைமை துரோகம் செய்து விட்டது என ராஜவர்மன் கடுமையாக விமர்சித்து பேசினார். இதையடுத்து சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட ராஜவர்மன் தோல்வி அடைந்தார். 

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ராஜவர்மன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். பல ஆண்டு காலம் கைகோர்த்து அரசியல் செய்து வந்த ராஜேந்திரபாலாஜியும் ராஜவர்மனும் பிரிவுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருப்பது, விருதுநகர் மாவட்ட அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

click me!