என்ன திடீர்னு எங்க மேல பாசம்? சின்னம்மாவிற்கு ஷாக் கொடுத்த மாஜி அமைச்சர்..!

By Selva KathirFirst Published Jun 11, 2021, 11:09 AM IST
Highlights

எனது மாவட்டத்தில் எனது ஜாதியை சேர்ந்தவர்கள் தான் மெஜாரிட்டி. ஆனால் நான் மட்டும் அல்ல என் ஜாதியில் இருந்து யார் கட்சியில் வளர்ந்தாலும் உங்களுக்கும், உங்கள் ஆதரவாளர்களுக்கும் பிடிக்காது. ஆனால் இப்போது எடப்பாடி – ஓபிஎஸ் கட்சியை ஜாதிக்கு அப்பாற்பட்டு நடத்துகிறார்கள் என்று பேச வேறு வழியே இல்லாமல் ரொம்ப நன்றி என்று கூறி செல்போனை சின்னம்மா வைத்ததாக சொல்கிறார்கள்.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு போன் போட்டு அவர்கள் மூலமாக மறுபடியும் அரசியல் களத்திற்கு நுழைய காய் நகர்த்த முயற்சித்து வரும் சசிகலாவிற்கு தென் மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ஒருவர் செல்போனிலேயே ஷாக் கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் முடிந்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே சசிகலா மறுபடியும் அரசியல் களம் புகுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இல்லை என்றாலும் மிகவும் பாதகமாக இல்லை. மேலும் தேர்தல் முடிவுகளில் அதிமுக தோல்வியை தழுவியிருந்தாலும் வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதை முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களிலும் கூட மதுரையில் கணிசமான தொகுதிகளை அதிமுக வென்றெடுத்துள்ளது.

இதனால் அதிமுக என்றால் அது எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் என்பது மறுபடியும் நிருபிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை போல அதிமுக படு தோல்வி அடையும் என்று சசிகலா காத்திருந்தார். அப்படி அதிமுக படு தோல்வி அடையும் பட்சத்தில் கண்டிப்பாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தன்னை தேடி வருவார்கள் என்றும் சசிகலா கணக்கு போட்டு காத்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு சாதாரண கிளை கழக செயலாளர் கூட சசிகலா வீட்டு வாசலை மிதிக்கவில்லை. இதனால் தானே அதிமுகவினரை தேடிச் செல்ல சசிகலா திட்டமிட்டு அதற்கு செல்போன் உரையாடலை பயன்படுத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் அதிமுகவில் இருந்து தற்போது அமமுகவில் இருக்க கூடிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் முதலில் சசிகலா செல்போனில் பேச ஆரம்பித்தார். இந்த உரையாடலை நிர்வாகிகள் ரெக்கார்டு செய்து வெளியிட்டனர். இதற்கு அமமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தினமும் ஒன்று இரண்டு பேர் என்பது மாறி ஒரே நாளில் ஐந்து பேர் வரை சசிகலா செல்போனில் பேச ஆரம்பித்தார். மேலும் விரைவில் தான் அரசியல் களத்திற்கு வர உள்ளதாகவே அவரது பேச்சு உரையாடலாக இருந்தது. இதன் பிறகு ஒரு கட்டத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், சீனியர்களை சசிகலா தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்துள்ளார்.

இப்படித்தான் தென் மாவட்டத்தில் அதிமுகவின் சீனியர் ஒருவர் தற்போது கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா இருக்கும் வரை மாவட்டச் செயலாளராக இருந்த அவர், கடந்த 2019ம் ஆண்டு அந்த பதவியில் இருந்து ஓபிஎஸ் – இபிஎஸ்சால் நீக்கப்பட்டார். மேலும் சட்டப்பேரவை தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிமுக மேலிடம் மீது அதிருப்தியில் தான் இருப்பார் என்று கருதி அவருக்கு தூண்டில் போட முடிவு செய்து செல்போனில் அவரை சசிகலா தொடர்பு கொண்டுள்ளார். நலம்  விசாரித்த பிறகு அரசியல் தொடர்பாக பேச்சு சென்றுள்ளது.

அப்போது அந்த முன்னாள் அமைச்சரின் கடந்த கால செயல்பாடுகளை சுட்டிக்காட்டி உங்களுக்கான காலம் மறுபடியும் வரும் என்று சசிகலா கூறியதாக சொல்கிறார்கள். இதனை கேட்ட மாத்திரத்தில் அந்த மாஜி அமைச்சர் டென்சன் ஆனதாக சொல்கிறார்கள். அமைச்சராக இருந்த தான் பதவியில் இருந்து நீக்கப்படவே நீங்கள் தான் காரணம் என்று செல்போனிலேயே அவர் கொதித்ததாக சொல்கிறார்கள். மேலும் என்ன காரணத்திற்காக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்த தன்னை மிகவும் கேவலமாக உங்கள் ஆதரவாளர்கள் நடத்தியதாகவும் அவர் பொரிந்து தள்ளியுள்ளார்.

இதனால் ஷாக்கான சசிகலா, அவரை சமாதானம் செய்ய முயன்ற நிலையில் அதற்கு பலன் கிடைக்கவில்லை என்கிறார்கள். எனது மாவட்டத்தில் எனது ஜாதியை சேர்ந்தவர்கள் தான் மெஜாரிட்டி. ஆனால் நான் மட்டும் அல்ல என் ஜாதியில் இருந்து யார் கட்சியில் வளர்ந்தாலும் உங்களுக்கும், உங்கள் ஆதரவாளர்களுக்கும் பிடிக்காது. ஆனால் இப்போது எடப்பாடி – ஓபிஎஸ் கட்சியை ஜாதிக்கு அப்பாற்பட்டு நடத்துகிறார்கள் என்று பேச வேறு வழியே இல்லாமல் ரொம்ப நன்றி என்று கூறி செல்போனை சின்னம்மா வைத்ததாக சொல்கிறார்கள். இந்த செல்போன் உரையாடலை மாஜி அமைச்சர் ரெக்கார்டு செய்து வைத்துள்ளதாகவும், தகவல் எடப்பாடி வரை சென்றுள்ள நிலையில் விரைவில் அந்த ரெக்காடு லீக் செய்யப்படும் என்கிறார்கள்.

click me!