
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் புகழ்பெற்ற நாகூர் தர்காவிற்கு தொழுகையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் திமுகவினரை நடமாட விடமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். ஆனால், அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
அதன்படி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ராஜேந்திரபாலாஜி மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. அதனால், தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்த காரணத்தால் தான் தலைமறைவாக வாழ்கிறார். கடந்த ஆட்சியில் 2 லட்சத்து 30 ஆயிரம் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி பட்டாசு வழங்கியதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோசடி செய்துள்ளார். ஆதாரபூர்வமாக சிக்கியுள்ளார். கண்டிப்பாக தண்டிக்கப்படுவார். அதிமுக ஆட்சியிலேயே திமுக உள்ளாட்சி தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையின் போது கூறியதை செய்து வருகிறார்.
5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டியதை 5 மாத காலத்திலேயே செய்துள்ளோம். சொன்னதை மட்டும் செய்யாமல் சொல்லாதவற்றையும் செய்துள்ளோம். வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றிபெறும். ஆவின் மூலம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.130 கோடிக்கு நெய் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.